உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: நடிகர் திலீப்குமார் ஹிந்தியில் நடிக்கத் தயங்கிய எம் ஜி ஆர் திரைப்படம்

பிளாஷ்பேக்: நடிகர் திலீப்குமார் ஹிந்தியில் நடிக்கத் தயங்கிய எம் ஜி ஆர் திரைப்படம்


தமிழ் திரையுலகின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் 1960களில், பிறமொழிகளில் வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் தமிழில் மறு ஆக்கம் செய்து வெளியிட்டு வெற்றி பெறுவதும், அதுபோல் இங்கு வெற்றி பெற்ற பல திரைப்படங்களின் கதைகள் பிற மொழிகளுக்குச் சென்று வெல்வதுமான ஒரு ஆரோக்கியமான போக்கு நிலவி வந்த காலகட்டங்களில், எம் ஜி ஆர் பிறமொழிப் படமொன்றின் கதையில் நடிக்கின்றார் என்றால், எம் ஜி ஆருக்கான தனி பாணியை மனதிற் கொண்டு, கதையில் சிற்சில மாற்றங்கள் செய்வது என்பது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே அப்போது இருந்தும் வந்தது.

குறிப்பாக வர்க்க பேதமின்றி வரியோரைக் காக்கும் வல்லவனாக, நீதியை போதிக்கும் நீதிமானாக, புகை பிடிக்காத, மது அருந்தாத, பெண்களுக்கு தீங்கிழைக்காத, அதர்மம் தலை தூக்கும் இடங்களில் தர்மத்தின் குரலாக ஒரு 'ராபின்ஹூட்' பிம்பத்தைப் போன்று தனது கதாபாத்திரத்தை வடிவமைத்து, தனக்கான ஒரு தனி பாணியை உருவாக்கி, திரையுலகில் தான் உள்ளவரை அதிலிருந்து சற்றும் மாறாமல் ஒரு தனித்துவமிக்க ஆளுமையாக இருந்து வந்தார் புரட்சி நடிகர் எம் ஜி ஆர்.

தான் ஒரு உச்ச நடிகராக இருந்தபோதும், படத் தயாரிப்பாளர்களிடம் மரியாதையுடன் கூடிய ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த ஒரு கண்ணியமான உறவையே பேணி வந்தவர்தான் எம் ஜி ஆர். “நாடோடி மன்னன்”, “அடிமைப் பெண்”, “உலகம் சுற்றும் வாலிபன்” போன்ற திரைப்படங்களுக்கு இவரே தயாரிப்பாளராக இருந்ததால், ஒரு தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் நன்கு உணர்ந்தவராகவும் இருந்ததால், அவரை வைத்து திரைப்படங்கள் தயாரித்த எந்த ஒரு தயாரிப்பாளரோ அல்லது விநியோகஸ்தரோ நஷ்டப் பட்டதில்லை என்பது பொதுவாக சொல்லப்பட்டு வரும் ஒரு கூற்று. அதனாலேயே கலையுலகில் இவருக்கு 'மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன்' என்ற ஒரு பெயரும் உண்டு. இப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற நடிகரை வைத்து, 'விஜயா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான பி நாகிரெட்டி தயாரித்த ஒரு திரைப்படம்தான் “எங்க வீட்டுப் பிள்ளை”.

1962ம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் டி ராமாநாயுடு தயாரிப்பில், என் டி ராமாராவ் இரட்டை வேடமேற்று நடித்து, வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குத் திரைப்படமான “ராமுடு பீமுடு” என்ற படத்தை, தமிழில் எம் ஜி ஆரை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து, தயாரிப்பாளர் பி நாகிரெட்டி எடுத்த திரைப்படம்தான் இந்த “எங்க வீட்டுப் பிள்ளை”. 1965ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இந்தத் திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாக வெற்றி பெற்று, வசூலை வாரி வழங்கியது தயாரிப்புத் தரப்பினருக்கு.

இதே திரைப்படத்தை ஹிந்தியிலும் எடுக்க முயற்சி மேற்கொண்டு, ஹிந்தி நடிகர் திலீப்குமாரை படத்தின் நாயகனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்தபோது, நடிகர் திலீப்குமார் தயாரிப்பாளர் பி நாகிரெட்டியிடம் முதலில் எம் ஜி ஆர் நடித்த “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தை எம் ஜி ஆருடன் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அதன்படி பி நாகிரெட்டி மற்றும் எம் ஜி ஆர் ஆகியோருடன் படத்தைப் பார்த்த நடிகர் திலீப்குமார், படம் மிகப் பிரமாதமாக இருக்கின்றது, ஆனால் இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று தயாரிப்பாளர் பி நாகிரெட்டியிடம் கூறினார்.

ஏன்? எனக் காரணம் கேட்ட தயாரிப்பாளர் பி நாகிரெட்டியிடம், “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் எம் ஜி ஆர் கையில் சாட்டையுடன் நடிகர் நம்பியார் முன் தனித்துப் பாடுவதாக வரும் “நான் ஆணையிட்டால்” என்ற அந்தப் பாடல் காட்சியில் எம் ஜி ஆர் நடித்திருப்பது போல் தன்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கின்றார். இதைக் கேட்ட எம் ஜி ஆர், நடிகர் திலீப் குமாரிடம் நீங்கள் மிகப் பெரிய நடிகர். அந்தப் பாடல் காட்சியை நீங்கள் உங்கள் பாணியில் நடித்தாலே படம் நன்றாக ஓடும் என்று அவரிடம் கூற, அதன் பின்பு நடிக்க ஒப்புக் கொண்டு, நடிகர் திலீப்குமார் நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் “ராம் அவுர் ஷ்யாம்”. 1967ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படமும் ஹிந்தியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !