உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடமாட முடியாத பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைத்த ஹிருத்திக் ரோஷன்

நடமாட முடியாத பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைத்த ஹிருத்திக் ரோஷன்


கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் பிஜா கிருஷ்ணன். இவருக்கு சிறுவயதிலிருந்தே செரிபரல் பால்சி பாதிப்பு உள்ளதால் பேசவோ தனது உடல் உறுப்புகளை சரியாக அசைக்கவோ முடியாது. ஆனாலும் இவருக்கு சினிமா மீது தீராத ஆர்வம் இருந்தது. இவரின் தந்தை புனேயில் பணிபுரிந்ததால் பிஜாவும் அங்கே வளர்ந்தார். அப்போது அவருக்கு ஹிந்தி மொழியின் மீது பற்றி ஏற்பட்டு குறிப்பாக ஹிருத்திக் ரோஷனின் முதல் படமான 'காஹோனா பி ஆர் ஹை' பார்த்தது முதல் அவரது தீவிர ரசிகையாக மாறினார். அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் கனவாக இருந்தது.

பிஜாவின் தம்பி சியாம் குறூப் தனது அக்காவின் ஆசையை நிறைவேற்ற கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் ஹிருத்திக் ரோஷனை சந்திப்பது கடினமாக இருந்தது இந்த நிலையில் சமீபத்தில் சியாம் இஸ்ரேல் சென்றபோது அங்கே ஹிருத்திக் ரோஷன் மேலாளரை தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்த விஷயத்தை அவரிடம் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து தற்போது கேரளாவில் இருந்தாலும் உடல்நிலை காரணமாக நீண்ட தூரம் பயணம் செய்வது, செங்குத்தாக கால்களை தொங்க விட்டு நீண்ட நேரம் உட்காருவது என உடல் சிரமங்கள் இருந்தாலும் கூட அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு தனது தாயார் பாலமணி அம்மா மற்றும் தம்பி சியாம் ஆகியோருடன் பிஜா விமானம் மூலம் மும்பை சென்றார்.

மும்பையில் ஒரு விளம்பர படிப்பில் நடித்துக் கொண்டிருந்த ஹிருத்திக் ரோஷன் இவர் வந்ததை அறிந்த உடன் சுமார் 20 நிமிடம் இடைவெளி ஒதுக்கி உடற்பயிற்சி கூடத்திலேயே தனது ரசிகை பிஜாவை சந்தித்தார். அவர் அருகில் அமர்ந்து அவர் பேசியவற்றை அன்புடன் கேட்டறிந்தார் ஹிருத்திக் ரோஷன். தனது நடுங்கும் கைகளால் கடந்த 2014ம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் படம் இடம்பெற்ற கைவினை பிரேம் ஒன்றை செய்து வைத்திருந்த பிஜா அதனை அவரிடம் பரிசாக வழங்கினார். மேலும் கேரளா முண்டு ஒன்றும் ஹிருத்திக் ரோஷன் உருவம் கைவண்ணத்தில் வரையப்பட்ட சட்டை ஆகியவற்றையும் பரிசாக அளித்தார். தன்னுடைய படம் எது பிடிக்கும் என ஹிருத்திக் ரோஷன் கேட்டபோது பிசா (FIZA) என்று கூற, தனக்கும் அந்த படம் தான் பிடிக்கும் என கூறி அவரிடம் அன்பை பகிர்ந்து கொண்டார் ஹிருத்திக் ரோஷன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !