உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2வில் மோகன்லால் காட்சிகள் நீக்கமா? : ஆடை வடிவமைப்பாளர் பதிவால் சர்ச்சை

ஜெயிலர் 2வில் மோகன்லால் காட்சிகள் நீக்கமா? : ஆடை வடிவமைப்பாளர் பதிவால் சர்ச்சை

ரஜினி நடித்த 'ஜெயிலர்' படத்தின் 2ம் பாகம் நேற்று வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், ஜாக்கி ஷெராப், விஜய் சேதுபதி, ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இவர்களில் மோகன்லால் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷாம்சுதீன் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து என் வேலையின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. டிரைலரிலேயே மோகன்லால் சார் 2 விநாடிகள் மட்டுமே காட்சியளிக்கப்பட்டார் என்றாலும் நான் கவலைப்படவில்லை. ஆனால், படம் வெளியான பிறகுதான் மோகன்லால் சாருக்காக நான் சிறப்பாக ஆடை வடிவமைத்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, டிரைலரில் வந்த அந்த ஒரு காட்சியும் படத்தில் ட்ரிம் செய்யப்பட்டுச் சுருக்கப்பட்டுவிட்டது. சினிமாவில் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், மோகன்லால் சார் போன்ற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை இப்படி வெட்டிச் சுருக்குவது முற்றிலும் தேவையற்ற ஒன்று.

நமது சூப்பர் ஸ்டார் திரையில் இப்படிச் சுருக்கப்பட்டுவிட்டதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒருவேளை 'ஜெயிலர்' படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்பட்டால், அதில் நான் நிச்சயமாகப் பங்கெடுக்க மாட்டேன். என் வேலையை நம்பிய அனைவருக்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் எந்த லாபத்திற்காகவோ, கோடிகளுக்காகவோ, பிராண்டுகளுக்காகவோ அல்லது ஸ்டார்டமிற்காகவோ நிற்கவில்லை. நான் மோகன்லால் சாருக்காகவும், அவருடைய ரசிகர்களுக்காகவும், சினிமா கலைக்காகவும் மட்டுமே நிற்கிறேன். என பதிவிட்டிருக்கிறார். இவரது பதிவு வைரலாகி சர்ச்சையாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !