உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நேரில் சென்று அஞ்சலி : ‛சொக்கத்தங்கம்' தேவா என வீடியோ வெளியிட்டு ரஜினிகாந்த் உருக்கம்

நேரில் சென்று அஞ்சலி : ‛சொக்கத்தங்கம்' தேவா என வீடியோ வெளியிட்டு ரஜினிகாந்த் உருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் உடன் ‛அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம்' ஆகிய மூன்று படங்களில் பணியாற்றி உள்ளார் மறைந்த இசையமைப்பாளர் தேவா. இந்த மூன்று படங்களில் முதல் இரண்டு படங்கள் ரஜினியின் ஆல்-டைம் பேவரைட் படங்களில் முக்கியமானது. இன்றைக்கு அவரது படங்கள் வெளியாகும் போது திரையில் வரும் ‛சூப்பர் ஸ்டார்' கார்டுக்கான பின்னணி இசையை தந்தவர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் மறைவு திரையுலகினர் மட்டுமல்ல ரஜினிக்கும் பேரதிர்ச்சி தான். அவரது மறைவையொட்டி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினி. பின்னர் அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சொக்கத்தங்கம்
ரஜினி வெளியிட்ட வீடியோவில், ‛‛என் அருமை நண்பர், இசையமைப்பாளர் தேவா திடீர் மறைவு ரொம்ப அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவர் எனக்கு அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என 3 படங்களை பண்ணினார். மூன்றும் மிகபெரிய சக்சஸ். அதன்பிறகு படையப்பா எடுக்கும் போது என் நண்பர்கள் எல்லாம் ஏஆர் ரஹ்மான் போட வேண்டும் என்று சொல்லும் போது நான் அரை மனதுடன் தேவாவிடம் போய் படையப்பா படத்துக்கு ஏஆர் ரஹ்மான் மியூசிக் என்று சொன்னபோது அவர் எழுந்து நின்று என் கையை பிடித்து, தாராளமாக பண்ணுங்கள் என்றார். இல்லை, நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ள கூடாது என்றேன். அதெல்லாம் இல்லை, இப்பத்தான் புது பையன் வந்திருக்கிறார், சந்தோஷமாக பண்ணுங்கள், உங்களிடம் 3 படங்கள் பண்ணியதே பெரும் பாக்கியம் என்றார். இப்படி ஒரு கள்ளம் கபடம் இல்லாத அருமையான சொக்கத்தங்கம் தேவா.

தம்பிகளை விட்டுக் கொடுக்காதவர்
வாழ்க்கையில் ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டவர். அண்ணன் தம்பிகள் 5 பேர். இவர்தான் மூத்தவர். தெருத்தெருவாக கச்சேரி பண்ணி கல்யாணத்தில் கச்சேரி வாசிச்சு, தம்பிகள் குடும்பத்தை காப்பாத்தினார். திரையுலகில் பெரிய இசையமைப்பாளரான போதும் கூட அவர் தனது தம்பிகளை விட்டுக் கொடுக்கவில்லை. கூடவே வைத்துக் கொண்டு இருந்தார். அருமையான குடும்பஸ்தர், நல்ல மனிதர்.

நல்லவனு ஆண்டவன் கூப்பிட்டுக் கொண்டார்
இளையராஜா கொடிக்கட்டி பறந்த காலத்தில், தனக்கென்று தனி பாணியை உருவாக்கி மிக பெரிய வெற்றியை அடைந்தார். இரண்டரை ஆண்டுகள் முன்பாக என்னிடம் வந்து, எல்லாரும் இசை நிகழ்ச்சி செய்கின்றனர், நானும் பண்ணுகிறேன் என்றார். நீங்கள்தான் தொடக்கி வைக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். நான் சந்தோஷமாக சென்று அதில் கலந்துகிட்டேன். அதன் பின்னர் வெளிநாடுகளில் கச்சேரிகளுக்கு சென்று வந்தார். ஒருமுறை சுற்றுப்பயணம் முடித்துவிட்டு 3 மாதங்கள் முன்பு என்னை வந்து பார்க்கிறார்.

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, இளைய தலைமுறையினர் என்னை வரவேற்கிறார்கள் என்று கூறினார். இந்த சந்தோஷத்திலே நான் இன்னும் 10, 15 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு போய்விடுகிறேன் என்று என்னிடம் சொன்னார். ஆண்டவன்... நீ ரொம்ப நல்லவன்பா, சந்தோஷமாக என்கூடவே வந்துவிடு என்று கூப்பிட்டுச் சென்றுவிட்டனர். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு தனது வீடியோவில் ரஜினிகாந்த் உருக்கமுடன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !