உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'அக்கா' டீசர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'அக்கா' டீசர்!


நெட்பிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள வெப் தொடர் 'அக்கா'. அக்டோபர் 30ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் நடிக்கின்றனர். 1980 காலக்கட்டத்தில் நடைபெறும் இத்தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி எழுதி, இயக்கியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. தனது பிறந்தநாளை முன்னிட்டு ‛அக்கா' தொடரின் டீசர் வெளியானது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், ‛‛என்னுடைய பிறந்தநாளன்று ‛அக்கா' டீசர் வெளியிட்டிருப்பது ரொம்பவே ஸ்பெஷல். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மறக்க முடியாதது பவானிதான். ராதிகா ஆப்தேவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய கதாபாத்திரங்கள் கதைக்கு சுவாரஸ்யமான பல பரிமாணங்களை தரும். நெட்பிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் தொடர் ‛அக்கா'. இந்தக் கதையின் தனித்துவமும், அதன் உலகமும்தான் என்னை ஈர்த்தது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது: 'அக்கா' தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பும் டீசர் வெளியீடும் கீர்த்தியின் பிறந்தநாளன்று வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. நான் நடித்திருக்கும் ருத்ரா கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் தனது கொள்கைகளால் வழிநடத்தப்படுபவள். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையே கேள்விக்குள்ளாக்கும் இயல்பும் அவளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மையும், அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களால் உருவாகும் பதற்றங்களும்தான் என்னை இந்தத் தொடரில் நடிக்க சம்மதிக்க வைத்தது. கடந்த பல ஆண்டுகளாக நெட்பிளிக்ஸூடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இதில் 'அக்கா' மறக்க முடியாத தொடர். பார்வையாளர்களின் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !