உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாரணாசி ஓடிடி ஒப்பந்தம் தாமதமாகிறது

வாரணாசி ஓடிடி ஒப்பந்தம் தாமதமாகிறது

ராஜமவுலியின் வாரணாசி படம் இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நேரப் பயணம் சார்ந்த பேண்டஸி கதையில் உருவாகும் இப்படம் ராமாயணத்தின் கூறுகளையும் த்ரில்லர் அம்சங்களையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்படுகிறது. மேலும், ராஜமவுலி சர்வதேச ரசிகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கும் முதல் படமும் இதுவே ஆகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது, ஓடிடி உரிமைகளின் மூலம் மட்டுமே குறைந்தபட்சம் ரூ. 500 கோடி வரை ஈட்ட முடியும் என்று ராஜமவுலியும் அவரது குழுவினரும் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பல்வேறு ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, தயாரிப்பாளர்களும் படக்குழுவினரும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.

இதற்கிடையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது அமைப்பில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்திய திரைப்படங்களை கைப்பற்றுவதில் நேரடியாகப் பாதிக்காது என்றாலும், தற்போதைய பேச்சுவார்த்தைகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் உடனான ஓடிடி ஒப்பந்தத்தை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம் என வாரணாசி படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், மகேஷ் பாபு தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளபோதிலும், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ராஜமவுலி தற்போது மீதமுள்ள காட்சிகளைப் படமாக்கி வருகிறார். மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும், பிரித்விராஜ் சுகுமாரன் முதன்மை வில்லனாகவும் நடிக்கும் வாரணாசி படம், 2027 ஏப்ரலில் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !