தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்தாத இளையராஜா, அஜித்
மறைந்த இசையமைப்பாளர் தேவா இறுதி சடங்கு, அவருடைய சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், மாங்காடு கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடந்தன. முன்னதாக சென்னை தி.நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால், அஜித் அஞ்சலி செலுத்தவில்லை. ஒரு இரங்கல் அறிக்கை கூட விடவில்லை. இத்தனைக்கும் அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான காதல் கோட்டை படத்துக்கு இசையமைத்தவர் தேவா. அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பெரியளவில் மக்களிடம் போய் சேர்ந்தன. இந்த படங்கள் தவிர வான்மதி, வாலி , ஆனந்த பூங்காற்றே, முகவரி, ரெட் என அஜித்தின் பல படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். ஆனால், ஏனோ அவர் அஞ்சலி செலுத்தவரவில்லை.
கார் ரேஸ் தொடர்பாக அவர் வெளிநாட்டில் இருக்கிறார். இருந்தாலும் ஒரு வீடியோ மூலமாக அறிக்கை விட்டு இருக்கலாம். தனது கார் ரேஸ் போட்டிகளுக்கு வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்டவர், தனது சினிமா வெற்றிக்கு உதவியாக இருந்த தேவாவை மறந்தது சரியா என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அஜித்தை நன்கு அறிந்தவர்களோ அவர் தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் திருமண வீடுகளுக்கு போய் வாழ்த்துவதும் இல்லை, தனக்கு நன்கு அறிந்தவர்கள், தன்னுடன் பணியாற்றியவர்கள் மறைந்தால் நேரில் போய் அஞ்சலி செலுத்துவதும் இல்லை. தான் வந்தால் கூட்டம் கூடும், அது அந்த நிகழ்வை, மற்றவர்களை பாதிக்கும் என நினைக்கிறார் என்கிறார்கள்.
தேவா வீட்டுக்குபின் ஸ்டூடியோ வைத்திருக்கும், சென்னை தி.நகரில் தேவா வீடு அருகே வசிக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவும் தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இரங்கலும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் மறைந்த செய்தி கேட்டு அன்றைய இசைப்பணிகளை மட்டும் நிறுத்தி வைத்துவிட்டார் என செய்தி வந்தது.