விபீஷணன் கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் : ராமாயணா மூலம் பாலிவுட்டில் என்ட்ரி
பாலிவுட்டில் அடுத்ததாக ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியீடாக நவ., 5ல் ரிலீஸாகிறது. இதில் பல மொழிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் ராவணனாக நடிகர் யஷ் நடித்துள்ளார். அவரது சகோதரர் விபீஷணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ஹரீஷ் உத்தமன்.
தமிழில் பல படங்களில் வில்லன் நடிகராக மற்றும் சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமான ஹரிஷ் உத்தமனுக்கு இது பாலிவுட்டில் கிடைத்துள்ள முதல் வாய்ப்பு.
இது குறித்து ஹரிஷ் உத்தமன் பேசும்போது, இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர், விபீஷணன் கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ய விரும்புவதாக கூறியபோது உண்மையிலேயே வியப்பாக இருந்தது. இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் ராமாயணா காவியத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. உடனே விபீஷணனின் கதாபாத்திரத்தை பற்றி மேலும் படிக்கவும், ஆராயவும் தொடங்கினேன். அதேசமயம் நமக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றியும் ஒரு சொந்த கோணம் இருக்கும், ஆனால் இயக்குனர் நமக்கு தரும் நுணுக்கமான விளக்கங்களும் வழிகாட்டுதல்களும் நாம் நினைத்திராத ஒரு கோணத்தில் அந்த கதாபாத்திரத்தை நமக்கு காட்டும் என்று கூறியுள்ளார்.