உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பிரபல கர்நாடக இசைப் பாடகியை சினிமா நட்சத்திரமாக்கிய இயக்குநர் கே சுப்ரமணியம்

பிளாஷ்பேக்: பிரபல கர்நாடக இசைப் பாடகியை சினிமா நட்சத்திரமாக்கிய இயக்குநர் கே சுப்ரமணியம்


தமிழ் திரையுலகிற்குப் பெருமை தேடித் தந்த இயக்குனர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், சட்டம் பயின்று, கலையின்பால் கொண்ட ஆர்வத்தின் காரணமாக சினிமாவை நேசித்து, இயக்குநர் அவதாரம் கண்டவர்தான் இயக்குநர் கே சுப்ரமணியம். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பல புதுமுகங்கள் பின்னாளில் போற்றுதலுக்குரிய சாதனையாளர்களாக தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். அந்த வரிசையில் இவரால் நடிப்புலகை நாடி வந்த ஒரு நாடறிந்த கர்நாடக இசைப் பாடகியைப் பற்றித்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.

தமிழகத்திலுள்ள கும்பகோணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் இயக்குநர் கே சுப்ரமணியம். கும்பகோணத்தில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் மகாமகத்தை முன்னிட்டு விசேஷமாக அங்கு ஒரு பொருட்காட்சியும் இடம்பெறும். அந்த வகையில் 1930களில் மகாமகம் பொருட்காட்சியின் காரியதரிசியாக அப்போது இருந்தவர் இயக்குநர் கே சுப்ரமணியம். பிரபல நடிகையும், இயக்குநர் கே சுப்ரமணியத்தின் மனைவியுமான எஸ் டி சுப்புலக்ஷ்மியை சென்னையில் அப்போது அடிக்கடி சந்தித்துப் பேசி வந்த ஒரு இளம் பாடகியைப் பார்த்திருந்த இயக்குநர் கே சுப்ரமணியம், அந்த இளம் பாடகியின் இசைக் கச்சேரியை அப்போது நடந்து வந்த கும்பகோணம் மகாமக பொருட்காட்சியில் இடம்பெற ஏற்பாடும் செய்திருந்தார். அதோடு மட்டுமின்றி வேறு யாருக்கும் அளிக்கப்படாத ஒரு சிறப்பம்சமாக அந்த ஆண்டின் மகாமக பொருட்காட்சியில் அந்த இளம் பாடகியின் இசைக் கச்சேரி இரண்டு முறை நடைபெற ஏற்பாடும் செய்திருந்தார்.

தேனாய் ஒலித்த அந்த இளம் பாடகியின் குரல் வளத்தில் வியந்து போயிருந்த இயக்குநர் கே சுப்ரமணியம், அப்போது பிரபல வாரஇதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்து கொண்டிருந்த கதை ஒன்று இயக்குநர் கே சுப்ரமணியத்திற்குப் பிடித்துப் போக, அதை திரைப்படமாக எடுக்க முற்பட்டு, அந்த நாளில் ஒரு கதைக்காக யாரும் தர இயலாத ஒரு பெரிய தொகையை தந்து அதன் உரிமையையும் பெற்றார். இந்தக் கதைக்கான முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, கும்பகோணம் மகாமகம் பொருட்காட்சியில் இசைக் கச்சேரி நடத்திய அந்த இளம் பாடகிதான் சரி என தீர்மானித்து, அவரையே நடிக்கவும் ஒப்பந்தம் செய்தார். அந்தப் படம்தான் “சேவா சதனம்”.

அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த அந்த நடிகை வேறு யாருமல்ல மறைந்த பிரபல கர்நாடக இசைக்குயில் “பத்மஸ்ரீ” எம் எஸ் சுப்புலக்ஷ்மி. அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்த எப் ஜி நடேச அய்யர் இந்தப் படத்தில் வயதான கணவர் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது இரண்டாந்தாரமாக எம் எஸ் சுப்புலக்ஷ்மியும், அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடிகை எஸ் வரலக்ஷ்மியும் நடித்திருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியையும் பெற்றிருந்தது. மேலும் தமிழ் திரை உலகமே பெருமை கொள்ளத்தக்க வகையில் அமைந்திருந்தது திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களின் இந்தத் திரைப்பிரவேசம் என்றாலும் அதுவும் மிகையன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !