தென்னிந்திய நடிகை என்பதால் பாலிவுட்டில் புறக்கணிக்கப்பட்டேனா? ; ரெஜினா கசான்ட்ராவின் சந்தேகம்
தமிழில் 2005ல் 'கண்ட நாள் முதல்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா, கிட்டத்தட்ட 20 வருடங்களாகத் தென்னிந்திய சினிமாவில் தாக்குப்பிடித்து நடித்து வருவது என்பது ஒரு சாதனையே. தொடர்ந்து சீரான இடைவெளிகளில் படங்களில் நடித்து வரும் ரெஜினா, தற்போது தீபாவளி வெளியீடாக சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் ஹிந்தியிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது 'மூக்குத்தி அம்மன் 2' படம் ரீலீஸ் ஆவதால் அது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வரும் ரெஜினா, பாலிவுட்டில் தான் எப்படி புறக்கணிக்கப்பட்டேன் என்பது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவான 'கேசரி சாப்டர் 2' என்கிற படத்தில் அக் ஷய் குமாரின் மனைவியாக நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். ஆனால் அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சோஷியல் மீடியா பதிவுகளிலும் என் பெயர் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. அந்தப் படத்தின் ஒரு பாடலில் ஆரம்பம் முதல் கடைசி வரை நான் மட்டுமே இடம்பெற்ற போதிலும் கூட, இன்ஸ்டாகிராம் பதிவுகளில் என் பெயரை டேக் செய்யக்கூட இல்லை. இது எதைக் குறிக்கிறது? நான் ஒரு தென்னிந்திய நடிகை என்பதற்காக இப்படிப் புறக்கணிக்கப்பட்டேனா ? என்று அவர் ஒரு சந்தேக கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
மேலும், சமீபத்தில் ஜான்வி கபூர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் தங்களுக்கு சரியான கதாபாத்திரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறித்துத் தவறாக சித்தரிக்கும் போக்கில் பேசியிருக்கிறார்கள். ஏன், இந்த வாய்ப்புகள் வந்தபோது எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவர்கள் அந்தப் படத்தில் இருந்து விலகியிருக்கலாமே? இது போன்ற புகார்கள் மூலம் வட இந்திய சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் இடையே தேவையில்லாமல் ஒரு பிளவை ஏற்படுத்துகிறார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ரெஜினா.