உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஓம்' படத்தில் மம்முட்டி ஜோடியாக ரேணு தேசாய் : 26 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி

'ஓம்' படத்தில் மம்முட்டி ஜோடியாக ரேணு தேசாய் : 26 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி

ரேணு தேசாய் யார் என தமிழ் சினிமாவின் இன்றைய ரசிகர்களுக்குத் தெரியாது. ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி.

தெலுங்கில் 2000ம் ஆண்டில் வெளியான பவன் கல்யாண் நடித்த 'பத்ரி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் பார்த்திபன், பிரபுதேவா நடித்த 'ஜேம்ஸ்பாண்டு' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கடுத்து 2003ல் பவன் கல்யாண் இயக்கி, நடித்த 'ஜானி' படத்தில் நடித்தார். அதற்கடுத்து சினிமாவிலில் நடிப்பதிலிருந்து விலகி பவன் கல்யாணுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார். 2009ல் திருமணம் செய்து கொண்டவர்கள் 2011ல் பிரிந்தனர்.

20 வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் 2023ல் வெளிவந்த 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்ற படத்தில் நடித்தார். தமிழில் 26 வருடங்களுக்குப் பிறகு தற்போது 'ஓம்' படத்தில் மம்முட்டி மனைவியாக நடித்துள்ளார். நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் ரேணு தேசாய் அவரது மகளுடன் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “இந்தத் திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது தெய்வத்தின் விருப்பம் என்றுதான் நினைக்கிறேன். கடந்த பிப்ரவரி மாதம் மகாசிவராத்திரி அன்று நான் அஸ்ஸாமில் உள்ள காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது.

மகா சிவராத்திரி, காமாக்யா தேவி கோயில், படத்தின் பெயர் 'ஓம்' என இவை அனைத்தும் ஒரு தெய்வீகமான தொடர்பாக எனக்குத் தோன்றியது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்னை நேரில் சந்திக்காமலேயே, எந்தவொரு லுக் டெஸ்ட்டும் நடத்தாமலேயே இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இன்று அவர் இங்கு இல்லாதது வருத்தமளிக்கிறது.

தனுஷிற்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு தமிழ் சரியாகப் பேசத் தெரியாது. படப்பிடிப்பின்போது நான் தமிழில் பேசிய தவறுகளை மிகவும் பொறுமையாகச் சகித்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. சில நேரங்களில், 'இவருக்கு ஏன் இன்னும் சரியாகத் தமிழ் பேச வரவில்லை ?' என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்.

எனக்கு 45 வயதாகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், இனி பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மம்மூட்டி உடன் பணியாற்றிய பிறகுதான் ஒருவருடைய உண்மையான ஆளுமை மற்றும் உயரம் என்ன என்பதைப் புரிந்துகொண்டேன்.

அவருக்கு முன்னால் நின்று பேசுவதற்கே எனக்குப் பயமாக இருந்தது. அவருடைய நடிப்பையும் ஆளுமையையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சீனியர் நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். படப்பிடிப்புத் தளத்தில் அவர் என்னை மிகவும் இயல்பாகவும் வசதியாகவும் உணரச் செய்தார்.

சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லாதது மட்டும் எனக்குச் சிறிய வருத்தம். அதே நேரத்தில் ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடித்த காட்சிகள் மிகவும் நன்றாக அமைந்தன.

இறுதியாக, இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நவம்பர் 20ம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்த்துவிட்டு எனது நடிப்பு குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !