சாத்விகா வீரவல்லி : முதல் படம் வருவதற்கு முன்பே 4 படங்களில் ஒப்பந்தம்
தெலுங்கில் இந்த வாரம் வெளியாக உள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளவர் சாத்விகா வீரவல்லி. அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்து இஞ்சினியரிங் படிப்பு மற்றும் மாஸ்டர் படிப்பு முடித்தார். அதன்பின் ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிக்க வந்துள்ளார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
'ஆகாசம்லோ ஒக தாரா' படம் தமிழில் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' என்ற பெயரில் டப்பிங் ஆகி நவம்பர் 20ல் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அல்லு அரவிந்த், சாத்விகா ஒரு தமிழ்ப் பெண் என்றார்.
இன்ஸ்டாகிராம் மூலம் சாத்விகாவைக் கண்டுபிடித்ததாகவும், இந்தப் படத்தை அடுத்து இரண்டு தெலுங்குப் படங்களில் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறினார். மேலும், சாத்விகா இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதைப் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் பின்னர் வரும் என்றார்.
முதல் படம் வெளிவருவதற்கு முன்பே நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாத்விகா.