உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பரில் வெளியாகும் 'விருஷகர்மா' : மீண்டும் ஒரு மூன்று மணி நேர படம் ?

டிசம்பரில் வெளியாகும் 'விருஷகர்மா' : மீண்டும் ஒரு மூன்று மணி நேர படம் ?

தென்னிந்திய திரை உலகில் அதிலும் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழில் தொடர்ந்து பல படங்கள் 3 மணி நேரமும் சில படங்கள் அதை தாண்டியும் ஓடும் விதமாக வெளியாகின்றன. படம் விறுவிறுப்பாக இருக்கும் பட்சத்தில் இந்த நேரத்தை ரசிகர்கள் பெரிதாக கருதவில்லை. அதேசமயம் பல படங்களுக்கு இந்த அதிகப்படியான நேரம் மைனஸ் பாயிண்டாக அமைந்து படத்தின் வெற்றியை பாதிக்கிறது. சமீபத்தில் வெளியான தனுஷின் 'ஓம்' படம் கூட நீளம் அதிகம் என்கிற விமர்சனத்தை சந்தித்துள்ளது. பிரபாஸ் மற்றும் ராம்சரணின் சில படங்கள் படம் வெளியான பிறகு 20 நிமிடம் வெட்டப்பட்ட நிகழ்வும் அவ்வப்போது நடைபெற்றது.

இந்த நிலையில் நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 'விருஷகர்மா' திரைப்படம் வரும் டிசம்பர் 4 ம் தேதி வெளியாக இருக்கிறது. மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் தண்டு வர்மா இயக்கியுள்ளார். இந்த படமும் மூன்று மணி நேரம் ஓடும் விதமாக உருவாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. புதையலை தேடும் கதை, பழங்கால பொருட்கள், தொல்பொருள் ஆய்வு என ஆர்வத்தை தூண்டும் கதையம்சத்துடன் இந்த படம் இருந்தாலும் மூன்று மணி நேரம் என்பது படத்தின் வரவேற்பையும் வசூலையும் பாதிக்கும் என்று திரையரங்கு அதிபர்களும் விநியோகஸ்தர்களும் கருதுகின்றனர். இருந்தாலும் படக்குழுவினர் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !