உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வரலாறு முக்கியம் அமைச்சரே… ஆஸ்கர் விருதை நோஸ்கட் செய்த இளையராஜாவும், பழைய ராஜாக்களும்!

வரலாறு முக்கியம் அமைச்சரே… ஆஸ்கர் விருதை நோஸ்கட் செய்த இளையராஜாவும், பழைய ராஜாக்களும்!

இளையராஜா ஐந்து நிமிடங்களில் உருவாக்கக்கூடிய இசையை, பெரும்பாலான ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர்களால் அவர்களுடைய ஐந்து வாழ்நாள்களில் கூட உருவாக்க முடியாது என்றார் - சர்வதேச புகழ்பெற்ற, கிராமி விருது வாங்கிய சாரங்கி இசைக் கலைஞர் உஸ்தாத் தில்ஷாத் கான் (Ustad Dilshad Khan).

இந்தியா சார்பாக ஆஸ்கர் ரேஸுக்குச் சென்றுள்ள 'கோந்தல்' படம் மூலம் அப்படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜாவிற்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற டாபிக் வலைதளங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அலையடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ' எங்க ராஜா ஆஸ்கருக்கும் மேலானவர். அதை பத்திரமா நீங்களே வச்சுக்கங்க' என்று அவரது ரசிகர்கள் பதிவிட்டு வர, அவருக்கான உச்சபட்ச பாராட்டுதான் முதல் பாரா.

கோந்தல் பட இயக்குநர் சந்தோஷ் டாவாகர் தனது படத்தின் இசைக்காக இளையாராஜாவையும் நாமிடேட் செய்ய பரிந்துரைக்க, ஆஸ்கர் கமிட்டியோ படத்தின் இசைக்கோர்ப்பு தொடர்பான கியூ சீட் கேட்க, அதற்கு இளையராஜா 'நான் கியூ சீட் தயாரித்துக் கொண்டெல்லாம் இசையமைப்பதில்லை' என்று அக்கோரிக்கையை நிராகரிக்க, அதையொட்டிய தர்க்கங்கள் குதர்க்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ராஜாவுக்கு முன்னரே ஏ.ஆர்.ரஹ்மானும், கீரவாணியும் ஆஸ்கர் வாங்கிவிட்டதால் ராஜா அதைப்பெற ஆர்வம் காட்டவில்லை என்று சிலர் சுட்டிக்காட்டுவதையும், சிம்பொனிக்கே கம்பெனி கொடுத்தவருக்கு என்னத்துக்கு ஆஸ்கர் என்று மார் தட்டுவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இப்படி ஆஸ்கரை அலட்சியப்படுத்தியதற்காக, உலக சினிமாவே ராஜாவை திரும்பிப் பார்க்கும் இந்த பொன்னான சமயத்தில் இளையராஜா ஸ்டைலில், இதே ஆஸ்கரை உதாசீனம் செய்த, பழைய ராஜாக்கள் சிலரும் இருந்திருக்கத்தானே செய்வார்கள்?

அந்த எண்ணிக்கை சற்று குறைவானதுதான் எனினும் வரலாறு மிக கவனமாக குறிப்பெடுத்துக் கொண்ட ஒன்று. ஏனெனில் உலக சினிமாவின் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதைப் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு கலைஞரின் கனவு. அந்த விருதைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகள் காத்திருப்பவர்களும் உண்டு. விருது கிடைக்காததால் கலங்கி நிற்வர்களும் உண்டு.

ஆனால் விருது அறிவிக்கப்பட்டும், அதை வாங்க மறுத்தவர்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்ல. விருதை வாங்க மறுத்ததோடு, ஆஸ்கர் மேடையையே அரசியல் எதிர்ப்புக்கான மேடையாக மாற்றியவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பின்னணியில் கலை மீதான பிடிவாதம், அரசியல் எதிர்ப்பு, இனவெறிக்கு எதிரான போராட்டம், ஹாலிவுட் மீதான அதிருப்தி எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

இந்த வரலாற்றில் ஒரு முக்கியமான வேறுபாட்டையும் கவனிக்க வேண்டும். விருதை நேரடியாக நிராகரித்தவர்கள், விருதைப் பெறத் தயங்கியவர்கள், விருது விழாவைப் புறக்கணித்தவர்கள் ஆகியோர் வெவ்வேறு வகையினர்.

டட்லி நிக்கோல்ஸ்

ஆஸ்கார் வரலாற்றிலேயே விருதை நிராகரித்த முதல் நபர் என்ற பெருமை டட்லி நிக்கோல்ஸுக்கு உண்டு. 1936-ல் தி இன்பார்மர் (The Informer) திரைப்படத்துக்காகச் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த விருதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் தனிப்பட்ட அதிருப்தியோ, விருதின் மீதான வெறுப்போ அல்ல. எழுத்தாளர்களின் உரிமைக்கான போராட்டம்!

அப்போது ஹாலிவுட் ஸ்டூடியோக்களுக்கும் திரைக்கதை எழுத்தாளர்களின் அமைப்புகளுக்கும் இடையே தொழிற்சங்கம் தொடர்பான மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எழுத்தாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புக்கு ஆதரவாக நின்ற நிக்கோல்ஸ், ஆஸ்கர் விழாவைப் புறக்கணித்ததோடு விருதையும் திருப்பி அனுப்பினார். அவருடைய போராட்டம் வீண் போகவில்லை. 1938-ல் Screen Writers Guild-க்கு அங்கீகாரம் கிடைத்த பிறகு, அவர் அந்த ஆஸ்கர் விருதை ஏற்றுக் கொண்டார். ஆஸ்கரை நிராகரித்தார்; ஆனால் தனது கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை!

ஜார்ஜ் சி.ஸ்காட்

அடுத்தவர் ஜார்ஜ் சி. ஸ்காட் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். 1970-ல் வெளியான பட்டன் (Patton) படத்தில் அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜார்ஜ் எஸ்.பாட்டனாக நடித்திருந்தார். அந்த நடிப்புக்காக 1971-ல் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அவருக்குக் கிடைத்தது. ஆனால் ஸ்காட்டுக்கு ஆஸ்கார் விருதின் மீதே பெரிய அதிருப்தி இருந்தது.

ஒரு நடிகரின் திறமையை இன்னொரு நடிகரின் திறமையோடு போட்டியிட வைப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆஸ்கர் விழாவை நடிகர்களுக்கிடையிலான செயற்கையான போட்டியாகப் பார்த்தார். தனக்கு விருது கிடைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று முன்பே அறிவித்திருந்தார். சொன்னபடியே விழாவுக்குச் செல்லவில்லை. அவருக்குப் பதிலாக தயாரிப்பாளர் விருதைப் பெற்றுக் கொண்டார். ஸ்காட் அந்த அங்கீகாரத்தைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை.

மார்லன் பிராண்டோ

இவர்கள் இருவரையும் தாண்டி தனது அரசியல் கொள்கைக்காக ஆஸ்கரை நிராகரித்தவர் மார்லன் பிராண்டோ. நடிகர்களில் ஒரிஜினல் நாயகன். தி காட்பாதர் (The Godfather) படத்தில் விட்டோ கார்லியோனாக நடித்த மார்லன் பிராண்டோவுக்கு 1973-ல் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் பிராண்டோ விழாவுக்குச் செல்லவில்லை. தனக்குப் பதிலாக நடிகையும், பழங்குடியினப் பெண்ணும் சமூகச் செயல்பாட்டாளருமான சச்சீன் லிட்டில்பெதரை அனுப்பினார்.

அவர் ஆஸ்கர் மேடைக்குச் சென்று பிராண்டோவின் சார்பில் விருதை ஏற்க மறுத்தார். அதற்கான காரணம் அமெரிக்கப் பழங்குடியின மக்களை ஹாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தவறாகவும் இழிவாகவும் சித்தரிப்பதாக பிராண்டோ கருதியதுதான். அதே நேரத்தில், அமெரிக்காவில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டங்களையும் அவர் உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்பினார்.

சச்சீன் லிட்டில்பெதர் மேடையில் பிராண்டோ எழுதிய அறிக்கையின் ஒரு பகுதியை வாசித்தார். அந்தச் சில நிமிடங்கள் உலகெங்கும் பேசப்பட்டன. அந்த நிகழ்வுக்குப் பிறகு பிராண்டோ தொழில் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதாகவும், மிரட்டல்களையும், அவமானங்களையும் சந்தித்ததாகவும் ஆஸ்கர் அகாடமியே பின்னாளில் குறிப்பிட்டது. பின்னர் அகாடமி அவரிடம் மன்னிப்பும் கேட்டது.

ஒரு நடிகர் தனது விருதை நிராகரித்தார்; ஆனால் அந்த நிராகரிப்பு ஒரு சமூகத்தின் குரலாக மாறியது! இதே ஆஸ்கரை நிராகரிக்காத, ஆனால் அதே சமயம் அலட்சியம் செய்த சிலரும் இருக்கிறார்கள்.

கேதரின் ஹெப்பர்ன் (Katharine Hepburn) : நான்கு முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றவர். ஆனால் விருது விழாக்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார்.

வுடி ஆலன் (Woody Allen) : மிக சிறந்த நடிகரான இவர் ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டாதவர். ‛விழாவுக்கு வந்தெல்லாம் வாங்கமாட்டேன். வேணும்னா வீட்டுல வந்து நீயே கொடு' என்று கெத்து காட்டியவர்.

மூன்றாவர் பீட்டர் ஓ'டூல் (Peter O'Toole) : 2003-ல் வாழ்நாள் சாதனைக்கான கவுரவ ஆஸ்கர் விருதை முதலில் ஏற்கத் தயங்கினார். இவர் தொடர்பான சம்பவம் ஆஸ்கர் வரலாற்றில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரான இவர் ஏழு முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் ஒருமுறைகூட போட்டிப் பிரிவில் வெற்றி பெறவில்லை. அவருடைய புகழ்பெற்ற படங்களில் ஒன்று Lawrence of Arabia (1962). அதில் டி.இ. லாரன்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ் பெற்றார். அதையொட்டி, 2003-ல் பீட்டர் ஓ'டூலுக்கு வாழ்நாள் சாதனைக்கான கௌரவ ஆஸ்கார் வழங்க அகாடமி முடிவு செய்தது. அப்போது அவருக்கு வயது 70. ஆனால் அந்த அறிவிப்பைக் கேட்டதும் அவர் மகிழ்ச்சியுடன் விருதை ஏற்றுக்கொள்ளவில்லை.
மாறாக, அகாடமிக்கு ஒரு கையெழுத்துக் கடிதம் எழுதினார்.

அதில் அவர் கேட்டுக்கொண்டது: 'நான் இன்னும் போட்டியில் இருக்கிறேன். ஒரு நாள் நேரடியாகப் போட்டியிட்டு ஆஸ்கர் வெல்லக்கூடும். எனவே எனக்கு 80 வயதாகும் வரை இந்தக் கவுரவத்தைத் தள்ளிவைக்க முடியுமா?'

அவருடைய இந்தக் கோரிக்கை அகாடமியை ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு பதில் அனுப்பிய ஆஸ்கர் அகாடமி, இப்பரிசை பெற்றுக் கொள்வதால் இனி வரும் காலங்களில் நீங்கள் போட்டியில் பங்குபெற முடியாது என்று அர்த்தம் அல்ல என்று அவரை சமாதானப்படுத்தி விருதை வாங்க வைத்தது.

இந்த இடத்தில் வரலாறு குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு ராஜசம்பவம் நினைவுக்கு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல வார இதழ் இதேபோல் இளையராஜாவுக்கு கமல் கையால் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' கொடுக்க முன் வந்தபோது ராஜா சொன்ன வார்த்தைகளும் இதேதான்.

'எனக்கு இன்னும் வாழ்நாள் இருக்கேய்யா. அதுக்குள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தா எப்படி?'

இந்தக் கேள்வி 'கோந்தல்' படத்துக்கு கியூ சீட் கேட்ட ஆஸ்கர்களுக்குமானது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !