உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோடம்பாக்கத்து குட்டி தேவதையை வியந்து பாராட்டிய ஆஸ்கர் நாயகன் டாம் ஹேங்க்ஸ்!

கோடம்பாக்கத்து குட்டி தேவதையை வியந்து பாராட்டிய ஆஸ்கர் நாயகன் டாம் ஹேங்க்ஸ்!

ஹாலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் டாம் ஹேங்க்ஸ்! உலக சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர். Forrest Gump, Philadelphia, Cast Away, Saving Private Ryan என அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.

ஒரே நடிகருக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகள் தரப்படுவதில்லை என்கிற மரபை தனது 'பிலடெல்பியா', 'பாரஸ்ட் கம்ப்' படங்களுக்காக தொடர்ச்சியாக பெற்று சாதனை படைத்தவர்.

அப்படிப்பட்ட அபாரமான உலகப் புகழ்பெற்ற நடிகர், சமீபத்தில் நம் தமிழ் நடிகையான குட்டி தேவதையின் நடிப்பைப் பார்த்துவிட்டு வியந்து பாராட்டியிருக்கிறார். அந்த நடிகை, பெரிய நட்சத்திரம் அல்ல. கோடம்பாக்கத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகை சாச்சனா நமிதாஸ்! அவர் நடித்தது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்.

2026 நவம்பர் 26 இன்று வெளியாகியுள்ள இந்தச் செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.

இந்தப் படத்தை டாம் ஹேங்க்ஸுக்குப் பரிந்துரை செய்தவர் கவிதா குப்தா. இவர் International Academy of Television Arts & Sciences அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற LACMA கலை விழாவில் டாம் ஹேங்க்ஸைச் சந்தித்தபோது, இந்தியாவிலிருந்து பார்க்க வேண்டிய மூன்று படங்களைப் பரிந்துரைக்கும்படி அவர் கேட்டிருக்கிறார்.

அப்போது கவிதா குப்தா பரிந்துரைத்த படங்களில் ஒன்று மகாராஜா. படத்தைப் பார்த்த டாம் ஹேங்க்ஸ், நவம்பர் 7 அன்று மற்றொரு LACMA விழாவில் கவிதா குப்தாவை மீண்டும் சந்தித்தபோது தானாகவே மகாராஜா படத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது அவர் குறிப்பாகச் சாச்சனாவின் நடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். அவர் சொன்ன வார்த்தைகள் இதுதான்:

I still can't get over that girl... What an incredible actor. I don't think I can do it; I would've killed the guy!

அதாவது, ''அந்தப் பெண்ணைப் பற்றிய நினைப்பிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை. என்னவொரு அற்புதமான நடிகை. அவள் நடித்ததைப் போல என்னால் நடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நானாக இருந்திருந்தால் அந்த ஆளைக் கொன்றிருப்பேன்!'' என்று வியந்திருக்கிறார்.

இந்தத் தகவலை கவிதா குப்தா, அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யார் இந்தச் சாச்சனா நமிதாஸ்?

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் அவருடைய மகள் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்தவர். இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கிய இப்படம் 2024-ல் வெளியானது. கதையின் உணர்ச்சிகரமான மையமாகச் சாச்சனாவின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வில்லனும் தனது ஒரிஜினல் தந்தையுமான அனுராக் காஷ்யபை சந்தித்துப் பேசும் காட்சியில் மிரட்டியிருப்பார்.

இந்தப் படத்தின் நடிப்புக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. டாம் ஹேங்க்ஸ் சாதாரண ஹாலிவுட் நடிகர் அல்ல. இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் என்பதையும் தாண்டி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர். அவர் நம் தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் ஒரு குட்டி தேவதையின் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார். ஒரு நடிகைக்கு இதைவிடப் பெரிய பாராட்டு என்ன இருக்க முடியும்?

ஒரு மஹாராஜா மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மஹாராணி தான் இந்த சச்சனா .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !