ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கு : டிச., 3ல் கெனிஷா ஆஜராக உத்தரவு
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார். இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆர்த்தியை பிரிந்த பின்னர் தனது தோழியான பாடகி கெனிஷா உடன் நெருக்கம் காட்டி வந்தார் ரவி.
இதை வைத்து அவ்வப்போது ரவி - ஆர்த்தி இடையே மாறி மாறி கருத்து மோதல்கள் நடந்தன. ஒருக்கட்டத்தில் இருவரும் பொது வெளியில் பேசக்கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது. இந்த பிரச்னையில் தன் பெயர் தேவையின்றி இழுக்கப்படுவதாக கூறி ரவியை விட்டு பிரிகிறேன், சென்னையை விட்டு வெளியேறுகிறேன் என கெனிஷா தெரிவித்தார்.
இதற்கிடையே தன் மீது அவதூறு பரப்புவதாக கெனிஷா மீது சென்னை ஐகோர்ட்டில் ஆர்த்தி வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகவும், அந்தப் பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் கோரியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் வருகிற டிச., 3ம் தேதி கெனிஷா நேரில் ஆஜராகி விளக்கம் வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. அன்றைய தினம் ஆஜராக தவறினால் வழக்கின் விசாரணை அன்றே முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.