உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சினிமா ரகசியங்களை உடைத்த 'சர்வர் சுந்தரம்'

பிளாஷ்பேக் : சினிமா ரகசியங்களை உடைத்த 'சர்வர் சுந்தரம்'

கே.பாலச்சந்தர் நடத்தி வந்த நாடம் தான் 'சர்வர் சுந்தரம்'. இந்த நாடகத்தை பார்த்த இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இந்த நாடகத்தை நாங்கள் சினிமாவாக எடுக்கப் போகிறோம் என்று நாடக மேடையிலேயே அறிவித்தார்கள். இதற்காக கணிசமான ஒரு தொகையையும் மேடையிலேயே பாலச்சந்தர் கையிலும் கொடுத்து விட்டார்கள். ஆனால் இந்த நாடக்தை ஏவிஎம் நிறுவனம் படமாக்க திட்மிட்டருந்தது. இதை கேள்விப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு ஏவிஎம் செட்டியாரை சந்தித்து நீங்களே தயாரியுங்கள், நாங்கள் இயக்குகிறோம் என்றனர். ஆனால் செட்டியார் இருவரும் சேர்ந்து தயாரிப்போம் என்று கூறி அதன்படியே தயாரானது.

இந்த படத்தின் விளம்பரத்தில் நாகேஷ் நான்கைந்து காப்பி கோப்பைகளை கையில் அடுக்கி வைத்துக் கொண்டு தடுமாறி நிற்பது போன்ற படம் பயன்படுத்தப்பட்டது. இந்த விளம்பரம், படம் பற்றிய பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் முடிந்ததும் முதல் காப்பியை பார்த்த ஏவிஎம் செட்டியார், விளம்பரத்தில் பயன்படுத்திய காட்சி படத்தில் இல்லையே என்றார். புகைப்படத்தில் சில டெக்னிக் வேலைகள் செய்து அந்த படத்தை உருவாக்கினோம். நிஜத்தில் அது சாத்தியமில்லை என்பதால் விட்டு விட்டோம் என்று இயக்குநர்கள் சொன்னதை செட்டியார் ஏற்கவில்லை. படம் பார்க்கும் ரசிகர்கள் அதனை ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். எப்படியாவது அந்த காட்சியை எடுத்து படத்தில் சேருங்கள் என்று கூறிவிட்டார்.

இந்த படத்தின் கதைப்படி நாகேஷ் ஒரு சினிமா நடிகர் என்பதால் ஒரு சினிமா எப்படி எடுக்கப்படுகிறது. சினிமாவில் மழை எப்படி பெய்கிறது. காற்று எப்படி வீசுகிறது. என்பதான சினிமாவின் மேக்கிங் ரகசியங்கள் காட்சிகளாக இடம் பெற்றது.

இப்படி தொழில் ரகசியத்தை வெளியிட்டால் மக்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து விடும், இதனால் அந்த காட்சிகளை நீங்கி விடுங்கள் என்று அன்றைக்கிருந்த மற்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் செட்டியாரிடம் கேட்டார்கள். ஆனால் அதற்கு செட்டியார் மறுத்து விட்டார். சினிமாவில் சினிமா எடுக்கப்படுவது பற்றி காட்டப்பட்ட முதல் படம் இதுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !