மூன்று 200 மில்லியன் பாடல்களில் சாய் பல்லவி
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இன்னமும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகாமல் இருப்பவர் சாய் பல்லவி. ஆனால், தெலுங்கில் அவருக்கென பிரத்யேகமான கதாபாத்திரங்களை உருவாக்கித் தந்து நடிக்க வைக்கிறார்கள் தெலுங்கு இயக்குனர்கள்.
நளினமாக நடனமாடும் திறமை கொண்ட சாய் பல்லவி தனது நடனத் திறமையை ஏற்கெனவே நிரூபித்துள்ளார். தமிழில் 'மாரி 2' படத்தில் 'ரௌடி பேபி' பாடலில் தனுஷை விடவும் சாய் பல்லவி தான் சிறப்பாக நடனமாடினார் என்று சொல்பவர்கள்தான் அதிகம்.
அப்பாடல் 1150 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்து தென்னிந்திய அளவில் முதல் சினிமா பாடலாக உள்ளது. அதற்கடுத்து சாய் பல்லவி நடித்துள்ள இரண்டு தெலுங்கு சினிமா பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.
அவர் தற்போது நடித்து வரும் 'லவ் ஸ்டோரி' படத்தில் இடம் பெற்றுள்ள 'சாரங்க தரியா' பாடல் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு 'பிடா' படத்தில் இடம் பெற்ற 'வச்சிந்தே' பாடல் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தென்னிந்திய அளவில், ஏன் இந்திய அளவில் கூட மூன்று 200 மில்லியன் பாடல்களைக் கடந்த நடிகை வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.