3 தேசிய விருதுகளை வென்ற பாலிவுட் நடிகை மாரடைப்பால் மரணம்
ADDED : 1583 days ago
மும்பை: மூன்று தேசிய விருதுகளை வென்ற பாலிவுட் நடிகையான சுரேகா சிக்ரி இன்று (ஜூலை 16) காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 75.
மூன்று தேசிய விருதை பெற்ற பிரபலமான, சுரேகா சிக்ரி, 2018-ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, மூளை பக்கவாதத்திற்கு ஆளானார். படப்பிடிப்பின் போது கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டது. இதுவே இவருக்கு பக்கவாதம் ஏற்பட காரணம் என கூறப்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனி செவிலியரின் தீவிர கவனிப்பில் இருந்து அதில் இருந்து மீண்டார். பின்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்த சுரேகா சிக்ரிக்கு இன்று காலை 8:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். சுரேகா சிக்ரி மறைவை தொடர்ந்து பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.