யோகிடா
தயாரிப்பு : வி செந்தில்குமார்.
இயக்கம் : கவுதம் கிருஷ்ணா
நடிப்பு : சாய் தன்ஷிகா, கபீர் துஹான் சிங், மனோபாலா, ஷாயாஜி ஷிண்டே
ஒளிப்பதிவு : எஸ்.கே.பூபதி
இசை : தீபக் தேவ், அஸ்வமித்ரா
வெளியான தேதி : பிப்ரவரி 6, 2026
நேரம் : 1 மணிநேரம் 59 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
நேர்மையாக பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் தன்ஷிகாவுக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் பரிசாக வழங்கப்படுகிறது. அந்தவகையில் சென்னை வியாசர்பாடி ஸ்டேஷனில் அவர் பணியில் சேருகிறார். அந்த ஏரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அடிதடி, கொலை, போதை மருந்து பிஸினஸ் என அராஜகம் செய்யும் வில்லன் கபீர் துஹான் சிங்கிற்கும், தன்ஷிகாவுக்கும் பிரச்னை வருகிறது. மத்திய அமைச்சரான தனது அண்ணன் ஷாயாஜி ஷிண்டே சப்போர்ட்டுடன் பல வகைகளில் தன்ஷிகாவை டார்ச்சர் செய்கிறான் வில்லன். அந்த அண்ணன், தம்பிகளுக்கு தனது அதிரடி பாணியில் தன்ஷிகா எப்படி பதில் கொடுக்கிறார் என்பதே யோகிடா கதை. தன்ஷிகா கேரக்டர் பெயர் யோகேஸ்வரி என்பதால் இந்த தலைப்பு
அந்தக்கால விஜயசாந்தி படம் மாதிரி தன்ஷிகாவை வைத்து ஒரு ஆக் ஷன் படம் செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் கவுதம் கிருஷ்ணா. அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்லலாம். காரணம், அந்த அதிரடி ஆக் ஷன் கேரக்டருக்கு தன்ஷிகா பக்காவாக பொருந்தி இருக்கிறார். குறிப்பாக, அவரின் கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம், அதிரடி ஆக் ஷன், ஸ்டைலிஷான நடிப்பு, சீனுக்கேற்ற வசனங்கள், நடிப்பு ஓரளவு செட்டாகி இருக்கிறது. ஆக் ஷன் காட்சிகளில் அவரும் டூப் போடாமல் பிரித்து மேய்ந்து இருக்கிறார். இவருக்குள் இப்படியொரு திறமையா என ஆச்சரியப்பட வைக்கிறது. ஆனால், கதைதான் பின்னோக்கி இழுக்கிறது.
எத்தனையோ படங்களில் பார்த்த தாதா வில்லன். அவரின் கொடூர கொலைகள், போலீஸ் இன்ஸ்பெக்டரையே கொல்வது, அவனுக்கு போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சப்போர்ட் இருப்பது, பார்த்த பெண்களை பலாத்காரம் செய்வது, எதிரிகளை கொல்ல அடியாட்களை அடிப்பது என பொறுமையை சோதிக்கிறார்கள். தாதா கேரக்டருக்கு கபீர் துஹானும் அதிகம் பொருந்தவில்லை. அவருக்கு சப்போர்ட் செய்யும், அண்ணனாக புகழ் பெற்ற ஷாயாஜி ஷிண்டே வருகிறார். அவரையும் தம்பியுடன் சேர்ந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். அவருக்கான முடிவை படமாக்கியது மட்டும் கொஞ்சம் பிரஷ்.
மறைந்த மனோபாலாவை நல்ல போலீஸ்காரராக பார்க்க முடிகிறது. (யோகிடா பழைய படம்போல). அவரின் கெட்அப், மென்மையான நடிப்பு ஓகே. ஆனால், அவர் இறந்துவிட்டதால் வேறுயாரையோ வைத்து டப்பிங் பேச வைத்து இருக்கிறார்கள். அது அவர் நடிப்பை கெடுக்கிறது. வழக்கம்போல் கெட்ட போலீஸ் ஆபீசராக ஒருவர் வருகிறார்கள். வில்லன்களின் அடியாட்கள் அவ்வப்போது வந்து சண்டைபோட்டு கை, காலை உடைத்துக் கொண்டு திரும்புகிறார்கள். நேர்மயைான போலீசுக்கு எதிராக பல விஷயங்கள் செட் செய்யப்பட்டு, அவரின் வேலை பறிக்கப்படுகிறது. இப்படி வழக்கமான கதையாக யோகிடா செல்கிறது.
படத்தில் ஹீரோ கிடையாது. காதல், காமெடி இதெல்லாம் கிடையாது. ஆனால், பைட்மாஸ்டர் கணேஷ் வொர்க், அவர் தன்ஷிகாவுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்ததை பாராட்டலாம். சின்ன, சின்ன விஷயங்களில் அக்கறை எடுத்து, பல அதிரடி சண்டைக்காட்சிகளை கொடுத்து இருக்கிறார். தன்ஷிகாவின் ஆர்வம், கடுமை உழைப்பு, அந்த சண்டைக்களை பவர்புல் ஆக்கி இருக்கிறது. போலீஸ் உடையில், மப்டியில் அவர் அடித்து துவைப்பது அருமை. படத்தில் இருக்கும் உருப்படியான ஒரு விஷயமும் அதுதான். தேசிய கொடிக்கு மரியாதை கொடுக்க, தன்ஷிகா போடும் சண்டை, தேசியக்கொடி குறித்து அவரின் வசனங்கள் சல்யூட். அதை சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் கேமராமேன் எஸ்.கே .பூபதி. விஜயசாந்தி மாதிரி அவரை கொண்டு வரணும்னு யோசித்தது ஓகே. அதற்கேற்க வலுவான கதையை சீன்களை அமைக்க தவறிவிட்டார் இயக்குனர்.
தன்ஷிகா கேரக்டரை வைத்து ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார் இயக்குனர். அது எடுக்கப்பட்ட விதம். அது தொடர்பான கோர்ட் காட்சிகளில் வலு இல்லை. அதனால், அந்த விஷயம் சரியாக போய் சேரவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வில்லன் எப்படியும் செத்துவிடுவான் என நமக்கு புரிந்துவிடுகிறது. அதுவே நடக்கிறது. தன்ஷிகாவை பிடித்தவர்களுக்கு படம் பிடிக்கும். மற்றபடி, வழக்கமான போலீஸ், வில்லன் கதையாக போராடிக்க வைக்கிறது.
யோகிடா - தன்ஷிகாவின் ஆக் ஷனை பார்த்து பார்வையாளர்கள் மிரண்டு இருக்க வேண்டும். ஆனால், விஷால் மட்டுமே பயப்பட வாய்ப்பு!