இதயம் முரளி
தயாரிப்பு : டான்பிக்சர்ஸ்
இயக்கம் : ஆகாஷ்பாஸ்கரன்
நடிப்பு :அதர்வா, கயாடுலோஹர், ப்ரீத்திமுகுந்தன், பகத்பாசில்
ஒளிப்பதிவு : சாய், மனோஜ் பரமஹம்சா
இசை : தமன்
வெளியான தேதி : ஜூலை 10, 2026
நேரம் : 2 மணிநேரம் 46 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
திருச்சியில் பள்ளியில் படிக்கிற காலத்தில் ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கும் அதர்வா, சென்னையில் கயாடு லோகரை காதலிக்கிறார். என்ன, அப்பா முரளி பாணியில் இரண்டு காதலையும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். சில ஆண்டுகள் கழித்து தமன் திருமணத்தில் நண்பர்கள் ஒன்று சேருகிறார்கள். அப்போதாவது காதலை சொன்னாரா? யாரிடம் சொன்னார். கல்யாணம் நடந்ததா? என்பது இதயம் முரளி கதை.
ஸ்கூல் ப்ரண்ட்ஷிப், காதல், காமெடி, கொண்டாட்டம் கலந்து யூத் புல்லாக இதயம் முரளியை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன். அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார். குறிப்பாக, ஹீரோ அண்ட் நண்பர்களின் திருச்சி லைப், டீச்சர், லவ், டியூசன், பிரிவு என ஆரம்ப காட்சிகள் பலருக்கு மலரும் நினைவுகளை ஏற்படுத்தும்.
ஸ்கூல் பையன், இளைஞன் என இரண்டு கெட் அப்பில் ஆடல், பாடல், நட்பு என அதர்வாவும் தன் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். டான்ஸ் பிரமாதமாக ஆடுகிறார். ப்ரீத்தியை துரத்தி துரத்தி காதலிக்கிற சீன், ஒரு டுவிஸ்ட்டில் மிரள்கிற சீன் ஓகே. கயாடுவிடம் காதலை சொல்ல முடியாமல் ரயில்வே ஸ்டேஷனில் தவிக்கிற இடமும், அப்போது வரும் சீன்களும், பின்னால் ஒலிக்கும் ராஜா பாடலும் இதயம் முரளி படத்தில் இதயத்தில் உட்காரும் இடங்கள். ஆனால், இடைவேளைக்குபின் அதர்வா கேரக்டரும், நடிப்பும் போராடிக்கிறது, படமும். கல்யாண காட்சி பல படங்களில் பார்த்ததும், படத்தின் பெரிய மைன்ஸ் . நிறைய இடங்களில் ஸ்கோர் பண்ண தவறிவிட்டார்
ஹீரோயின்களில் ப்ரீத்தி முகுந்தன் அழகு, அவர் காஸ்ட்யூம், டான்ஸ் இன்னும் அழகு. அவர் சம்பந்தப்பட்ட ஒரு டுவிஸ்டை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்து இருக்கலாம். கிளைமாக்சில் இன்னும் நடிக்க முயற்சி செய்து இருக்கலாம். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் கயாடு ஹோம்லியாக, அழகாக நடித்து இருக்கிறார். இடைவேளைக்குபின் காணாமல் போய் விடுகிறார். தமன் காதலியாக வரும் நிகாரிகா துறுதுறு. டீச்சராக ஜொனிட்டா சில இடங்களில் வந்தாலும் மனதில் நிற்கிறார். நட்டி நடிப்பு ஒட்டவில்லை.
தமன், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், ரக் ஷன் என ஏகப்பட்ட ஆண் நடிகர்கள் இருந்தாலும் சில இடங்களில் கலகலப்பு. மற்றபடி பேசிக் கொண்டே இருக்கிறார்கள் ஏமாற்றமே அதிகம். பஹத் பாசில் நடிப்பு ஓகே. சின்னி ஜெயந்த் மனதில் நிற்கிறார். பப்லு வரும் சீன் எரிச்சல். ஒளிப்பதிவாளர், மனோஜ், சாய் ஓரளவு படத்தை கலர்புல்லாக்கி இருக்கிறார்.
காதல் கதை தான் ஆனாலும் புதுமை இல்லை. பல சீன் இப்படி வரும் இப்படி முடியும் என முன்பே தெரிய வருவது திரைக்கதை ஓட்டை. முதற்பாதி வேகமாக நகர்கிறது. ஆனால் பிற்பாதி இழுத்து போரடிக்கிறது. இப்படிப்பட்ட காதல் கதைகளுக்கு இசையும், பாடலும் தூக்கலாக இருந்தால், படத்தை தூக்கி நிறுத்தி இருக்கும். பாடல்கள் ஓகே என்றாலும் இன்னும் மெலோடியாக, லவ்வபிள் ஆக இருந்தால் படம் இன்னும் ஹிட்டாகி இருக்கும். இடைவேளைக்குபின் இயக்குனர் குழம்பி நம்மையும் குழப்புகிறார். காதலை சொல்லாமல் ஏன் தவிக்கிறார் என்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை. பெரிய பட்ஜெட், ஏகப்பட்ட நட்சத்திரங்கள், அமெரிக்காவில் படப்பிடிப்பு என பல விஷயங்கள் இருந்தாலும் காதலில், கதையில் சொதப்பிவிட்டார் இயக்குனர். படம் இதயம் மாதிரி இல்லை, அதர்வாவும் அப்பா மாதிரி நடிக்கலை.
இதயம் முரளி - இதயத்திற்கான நெருக்கம் குறைவு