உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / கட்சிக்காரன்

கட்சிக்காரன்

தயாரிப்பு - பிஎஸ்கே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஐயப்பன்
இசை - ரோஷன் ஜோசப்
நடிப்பு - விஜித் சரவணன், ஸ்வேதா டோரத்தி, தெனாலி
வெளியான தேதி - 16 டிசம்பர் 2022
நேரம் -
ரேட்டிங் - 2.5/5

ஒரு அறிமுகக் கதாநாயகன் நடிக்க, அரசியல் படத்தை எடுப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும். முன்னணி நடிகர்களே தற்போதைய சூழ்நிலையில் அரசியல் படங்களை எடுக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்காக முதலில் படக்குழுவினரைப் பாராட்ட வேண்டும்.

ஒரு கட்சியின் மீது தீவிரமான பற்று கொண்ட சாதாரணத் தொண்டன், அந்தக் கட்சித் தலைவரால் பாதிக்கப்பட்டு, அந்தத் தலைவரையே எதிர்த்து அரசியல் செய்து எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ஐயப்பன்.

மக்கள் கட்சியின் அதி தீவிரமான தொண்டர் விஜித் சரவணன். தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் எந்த சாதியாக இருந்தாலும் பரவாயில்லை, தனது கட்சிக்காரராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அளவிற்கு ஒரு தீவிர தொண்டர். பெண் பார்க்கும் போதே நாயகி ஸ்வேதா டோரத்தி--யிடம் தனது கட்சியில் சேர வேண்டும் என்ற நிபந்தனை விதித்து திருமணம் செய்து கொள்கிறார். அப்படிப்பட்ட தீவிர தொண்டனுக்கு கவுன்சிலர் பதவிக்காகப் போட்டியிட சீட் தருவதாகச் சொல்லி கடைசியில் ஏமாற்றிவிடுகிறார் கட்சித் தலைவர். அதனால், கோபமடையும் விஜித் சரவணன், தலைவரை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு தலைவருக்கும் தொண்டனுக்குமான மோதல் எதில் போய் முடிகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தங்களது மனைவியின் தாலியைக் கூட அடகு வைத்து கட்சிக்காகச் செலவு செய்யும் நேர்மையான தொண்டர்கள் பலர், இப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரத்தைப் போல, இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் தலைவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அவர் சொன்னதை செயல்படுத்தும் தீவிர தொண்டனாக நடித்திருக்கிறார் விஜித் சரவணன். முதலில் அப்பாவித் தொண்டனாகவும், பின்னர் தலைவரையே எதிர்க்கும் தொண்டனாகவும் நடித்திருக்கிறார். வசனங்களை அழுத்தமாகப் பேசிவிடுகிறார், ஆனால், முகபாவங்களில் இன்னும் கூடுதலான பயிற்சி தேவை.

அரசியல் நிலவரத்தையும், கட்சித் தலைவரின் குணத்தையும் கணவன் விஜித்துக்கு உணர்த்தும் மனைவியாக ஸ்வேதா டாரதி. அழகாகவும் இருக்கிறார், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தும் இருக்கிறார்.

மக்கள் கட்சியின் தலைவராக சிவசேனாதிபதி. தொண்டர்களை ஏமாற்றி கட்சி நடத்தும் தலைவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என யோசிக்க வைக்கிறார். நாயகனை விடவும் அதிகமான அரசியல் வசனங்களை நாயகனின் நண்பனாக வரும் தெனாலிக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். பல அரசியல் சம்பவங்களை அந்தக் கதாபாத்திரம் மூலம் மீண்டும் ஞாபகப்படுத்தி வைக்கிறார்கள். தலைவரின் உதவியாளராக அப்புக்குட்டி.

பின்னணி இசையை விட இரண்டே இரண்டு பாடல்களில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ரோஷன் ஜோசப்.

அப்பாவித் தொண்டர்களே, கட்சிகளையும், கட்சித் தலைமையையும் நம்பி ஏமாந்து போகாதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கிறது. படம் முழுவதும் கதாபாத்திரங்கள் பேசிக் கொண்டே இருப்பதால் ஒரு நாடகத்தனம் வந்துவிடுகிறது. தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக தலைமையை எதிர்ப்பது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. மேக்கிங்கில் தனி கவனம் செலுத்தி, செலவு செய்து எடுத்திருந்தால் படத்தின் தரம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

கட்சிக்காரன் - அரசியல் நாடகம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !