உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / போர்த் புளோர்

போர்த் புளோர்

தயாரிப்பு : ஏ.ராஜா
இயக்கம் : எல்.ஆர்.சுந்தரபாண்டி
நடிப்பு : ஆரி, தலைவாசல் விஜய், சுப்ரமணியசிவா, பவித்ரா, தீப்ஷிகா,
ஒளிப்பதிவு : ஜே.லக் ஷ்மண்
இசை : தரன்குமார்.
வெளியான தேதி : பிப்ரவரி 27, 2026
நேரம் : 2 மணிநேரம் 14 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

தலைப்பிலேயே கதை இருக்கிறது. சென்னையில் ஐடியில் வேலை செய்யும் ஆரி, கம்பெனி ஒதுக்கியுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போர்த் புளோரில் தங்கியிருந்து, காணாமல் போன தனது முன்னாள் காதலியை தேடுகிறார். அங்கே அவருக்கு சில அமாஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன. கனவு மூலம் சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் அவர் பார்த்த நபர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் திடீரனெ காணாமல் போகிறார்கள். அவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டவர்கள் என்பது ஆரிக்கு தெரியவருகிறது. அவர்களை கொன்றது யார்? அந்த அடுக்குமாடி குடியிருப்பில் என்ன பிரச்னை. அங்கே வசித்த ஆரியின் காதலிக்கு என்ன ஆனது. அனைத்து மர்மங்களையும் ஆரி கண்டுபிடித்தாரா? இதுதான் போர்த் புளோர் கதைக்கரு

காணாமல் போன காதலியை தேடும் காதலன், அவர் கனவில் வந்து மிரட்டும் விஷயங்கள், பலரை கொல்லும் வில்லன், அப்படி பேய் ஆனவர்கள் ஆரியின் கண்களுக்கு மட்டும் தெரிவது, நிலப்பிரச்னை, அரசியல்வாதிகள், தாதாக்களின் பணத்தாசை என பல லேயர்களில் கதை விரிகிறது. கிளைமாக்சில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மர்மங்களை ஆரி கண்டுபிடிக்கிறார். அப்போது பாதிக்கப்பட்ட பேய்கள் என்ன செய்கின்றன என்ற ரீதியிலும் காட்சிகள் விரிகின்றன. கொஞ்சம் சீரியஸ் ஆன ரோலில் ஆரியின் நடிப்பு ஓகே. ஆனால், பல காட்சிகளில் ஒரே மாதிரியான முகபாவங்களை காண்பிப்பது மைனஸ். ஹீரோயினாக வரும் பவித்ராவுக்கு அதிகம் வேலை இல்லை. அவர் காதல் காட்சிகளும் கதைக்கு செட்டாகவில்லை. ஆரியின் பக்கத்து வீட்டுக்காரராக வரும் தீப்ஷிகாவுக்கும் படத்தில் பெரிய பங்களிப்பு இல்லை. ஆரியின் நண்பர்களாக வரும் கதிர் உட்பட சிலர், கொஞ்சம் காமெடி செய்கிறார்கள். அது கொஞ்சம் ஆறுதல்

ஆரியின் பக்கத்து வீட்டுகாரராக வரும் அந்த பெரியவர் மனதில் நிற்கிறார். அதேபோல் முக்கியமான வேடத்தில் வரும் குழந்தை கேரக்டரும் கதைக்கு பலம். வில்லனாக நடித்துள்ள இயக்குனர் சுப்ரமணிய சிவா முதற்பாதியில் ஒரு சீனில் மட்டுமே வருகிறார். இரண்டாவது பாதியில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆகிவிட்டது. அதேபோல், பத்திரிகையாளராக வரும் தலைவாசல் விஜயும் ஓவரோ ஓவர் ஆக்டிங். சினிமா இப்ப மாறிவிட்டது. அதை இவர்கள் கவனிப்பது இல்லை போலும். அடுக்கு மாடியிருப்பு மர்மம் பின்னணி, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், நிலவிஷயத்தில் நடக்கும் அரசியல் கொலைகள் பகீர். ஆனால், அதை சரியாக சொல்லாமல், அழுத்தமாக சொல்லாமல் விட்டுவிட்டார் இயக்குனர். கதையில் பல திருப்பங்கள் இருக்கிறது. பல இடங்களில் சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த குழந்தை பின்னணி புதுமை. ஆனால் அது கோர்வையாக இல்லை. அமானுஷ்ய காட்சிகள் புதுமை. ஆனால், அது விறுவிறுப்பை, பயத்தை தரவி்லலை.

பேய் கதையில் கொஞ்சம் காதல், சஸ்பென்ஸ், ஆக் ஷன் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். பேய் விஷயங்கள், ஆரியை துரத்தும் கனவு விஷயங்கள் நன்றாக இருக்கிறது. தன்னை பாதித்த விஷயங்களுக்கும், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று நினைத்து, அதை தேடி ஆரி செல்வது, அது குறித்து விசாரிப்பது, வில்லன்களின் அட்டகாசம் ஓரளவு பரபரப்பு. பேய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்னும் மிரட்டியிருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும். காதல், ஆக் ஷன் போர்ஷன் சுமார். அடுக்கு மாடி குடியிருப்பு சம்பந்தப்பட்ட விஷயம், நிலத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பணத்தாசை பிடித்தவர்கள் செய்யும் போர்ஜரிகள் பொதுமக்களுக்கு நல்ல மெசேஜ். கிளைமாக்ஸ் காட்சி பரவாயில்லை ரகம். அதை இன்னும் பரபரப்பாக எடுத்து இருக்கலாம். லக் ஷ்மண் ஒளிப்பதிவு ஓகே. தரன் இசை சுமார். ஆனாலும், படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான பிளஸ், கமர்ஷியல் விஷயங்கள் அதிகம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது.

போர்த் புளோர் - திரைக்கதை பலவீனத்தால் பர்ஸ்ட் புளோர் தாண்டவே முச்சிரைக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !