உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / காதல் ரீசெட் ரிப்பீட்

காதல் ரீசெட் ரிப்பீட்

தயாரிப்பு : டி ஸ்டூடியோஸ், டென்வி புர டக்சன்ஸ்
இயக்கம் : விஜய்
நடிப்பு : மதும் கேஸ், ஜியா சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், விஜி சந்திரசேகர், அர்ஜூன்
ஒளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியான தேதி : மார்ச் 6, 2026
நேரம் : 2 மணிநேரம் 17 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

ஸ்காட்லாந்து செல்லும் ஹீரோயினுக்கு ஒரு விபத்து காரணமாக ஞாபகமறதி ஏற்படுகிறது. அதுவும் வித்தியாசமான மறதி. இரவு தூங்கி எழுந்தால் அனைத்து பழைய சம்பவங்களும் அவருக்கு மறந்து போய் விடுகிறது. அவரை காதலிக்கும் ஹீரோ மதும் கேஸ், இந்த நிலையிலும் அவரை பாதுகாக்கிறார். அப்போது இசை நிகழ்ச்சிகாக ஸ்காட்லாந்தில் தங்கி இருக்கும், ஹீரோயின் காதலுக்கும் 'அர்ஜூன் 'இவர்களை சந்திக்க, என்ன நடக்கிறது. அர்ஜூன், ஜியா சங்கர் காதலித்தது எப்படி? பிரிந்தது ஏன்? விபத்து நடந்தது ஏன்? மதும் கேஸ், ஜியா இணைந்தார்களா? என்பது காதல் ரீசெட் ரிப்பீட் கதை. மதராசபட்டினம், தெய்வதிருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய் இயக்கியுள்ளார்.

முக்கோண காதல், விபத்து, மறதி பின்னணியில் ஏகப்பட்ட படங்கள் வந்து இருந்தாலும் ஸ்காட்லாந்து பின்னணியில் இந்த கதை நடப்பதும், இசை ஒரு முக்கியமான விஷயமாக இருப்பதும் ஸ்பெஷல். அதனால் ஹாரிஸ் ஜெயராஜை தேர்ந்தெடுக்கிறார் விஜய். நான் யார்? நீங்க யார்? எனக்கு என்ன நடந்தது என தினமும் காலையில் எழுந்து சவுண்டு விடுகிறார் ஹீரோயின். அவரை ஹீரோவும், ஸ்காட்லாந்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருக்கும் எம்.எஸ்.பாபுவும் சமாதானப்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் ஹீரோயின் யார்?அவர் ஏன் ஸ்காட்லாந்து வந்தார். அவரை ஒரு தலையாக காதலித்த தான் எப்படி ஸ்காட்லாந்து வந்தேன் என்பதை எம்.எஸ்.பாஸ்கரிடம் விவரிக்க, அதற்குள் வில்லனான இன்னொரு ஹீரோ இவர்கள் வாழ்வில் என்ட்ரி ஆக, கதையும் சூடுபிடிக்கிறார். என்ன நடந்து இருக்கும் என அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.

படத்தின் தயாரிப்பாளர் மகனே ஹீரோ என்பதால், அவருக்காக இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் விஜய். புதுமுக ஹீரோவாக இருந்தாலும் மதும் கேஸ் நடிப்பு, அவரின் நடை கூட ரொம்ப மெதுவாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளில் கூட அமைதியாக இருக்கிறார். மிக முக்கியமான சீன்களில் கூட உணர்ச்சிகளை கொண்டு வர தத்தளிக்கிறார். தயாரிப்பாளர் மகன் என்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து இருக்கிறார் விஜய். இன்னொரு முக்கியமான நடிகராக, வில்லனாக ஹீரோயின் காதலிக்கும் மலையாள நடிகரான அர்ஜூன் நேர் எதிர். ஓவர் ஆக்டிங் செய்து அந்த கேரக்டரை சொதப்பி இருக்கிறார். அவரின் மலையாள டப்பிங் வாடையும் கதையுடன் அவரை ஒன்றவிடாமல் செய்கிறார்.

ஆனால் இவர்கள் இருவரைவிட ஹீரோயின் ஜியா சங்கர் நடிப்பு, காஸ்ட்யூம் அழகு. பாடல் காட்சிகளில், ஞாபகமறதியால் தவிக்கிற காட்சிகளில், சின்ன, சின்ன எக்ஸ்பிரசனில் கியூட்டாக நடித்து இருக்கிறார். அவர் பாடகியாக வருவதால் ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பாடல்கள் அவரை இன்னும் அழகாக காண்பிக்கின்றன. கிளைமாக்சிலும் ஜியா சங்கர் நடிப்பு உருக்கம். போலி டாக்டராக, ஸ்காட்லாந்துவாசியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரை சரியாக பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. அந்த கேரக்டரும் அழுத்தமாக இல்லை. வழக்கமான ஹீரோயின் பணக்கார அப்பாவாக ஜெயபிரகாஷ் வந்து போகிறார். விஜி சந்திரசேகருக்கு பல படங்களில் பார்த்த சென்டிமென்ட் அம்மா வேடம். ஹீரோயின் தவிர மற்ற கேரக்டர்களில் அவ்வளவு செயற்கை தனம், நடிப்பும் அப்படியே. இதற்கிடையில், வெள்ளைக்காரர்கள் சிலர் நடித்து இம்சை தருகிறார்கள்

சரி, இசை சம்பந்தப்பட்ட படம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை ஆச்சே என்று எதிர்பார்த்தால் கிளைமாக்ஸ் பாடல், சித்ஸ்ரீராம் வாய்ஸ் என சில இடங்களில் அவர் தனது பங்களிப்பை தந்து இருக்கிறார். ஆனால், கவுதம் மேனன் படம் மாதிரியான பீலிங் இல்லை. பழைய ஹாரிசை பார்க்க முடியவில்லை. தவிர, இளையராஜாவின் புகழ்பெற்ற 'சங்கத்தில் பாடாத கவிதை' பாடலை காப்பி அடித்து ஒரு பாடல் கொடுத்து இருக்கிறார். அது தீம் இசையாகவும் வருகிறது. ரம்ரம் பாடலும் கேட்கிறது. இளையநிலா பாடலை கொஞ்சம் பாட வைத்து இருக்கிறார் இயக்குனர். ஹாரிஸ் ஜெயராஜ் படத்தில் இவ்வளவு இளையராஜா தாக்கமா? இதெல்லாம் இளையராஜாவுக்கு தெரியுமா? காப்பிரைட் பிரச்னையில் நோட்டீஸ் அனுப்புவாரா என்ற கேள்வி எழுகிறது. சில ஷாட்டுகளில் ஸ்காட்லாந்து அழகை அள்ளி தந்து இருக்கிறது அரவிந்த் கிருஷ்ணா கேமரா. ஆனால் பல காட்சிகள் ஒரு வீட்டுக்குள், ஓட்டலில் எடுத்து இருப்பது ஏமாற்றம். இதை எடுக்க ஏன் ஸ்காட்லாந்து என்ற கேள்வி எழுகிறது.

ஹீரோயின் ஞாபகமறதி விஷயம்தான் படத்தின் முக்கியமான கரு. அந்த காட்சிகளில் ஹீரோயின் நன்றாக நடித்து இருந்தாலும் அழுத்தம் இல்லாத திரைக்கதையால், அக்கறை இல்லாத காட்சிகளில் அது எடுபடவில்லை. அதிலும் இடைவேளைக்குபின் வில்லன் அர்ஜூன் டீம் அடிக்கிற லுாட்டி எரிச்சலை கிளப்புகிறது. படம் முழுக்க தேடினாலும் நாலைந்து நல்ல சீன்களை கூட பார்க்க முடியவில்லை. கிளைமாக்ஸ் பாடல் கொஞ்சம் செயற்கைதனமான சிச்சுவேஷனாக தெரிகிறது. ஒரு சின்ன திருப்பத்துடன் படத்தை முடித்து இருப்பது ஆறுதல். புதுமுகங்கள் நடிப்பு செட்டாகவில்லை என்றால், கதையும், சீன்களும் ரொம்பவே போர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, விஜய் இயக்கிய படமாச்சே என்று நம்பி சென்றால் ரிப்பீட்டாக அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். முடியலை சாமி!

காதல் ரீசெட் ரிப்பீட் - நாலைந்து 'தலைவா' படம் பார்த்த பீலிங்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !