நீ பார்எவர்
தயாரிப்பு : ஜென் ஸ்டூடியோஸ்
இயக்கம் : அசோக்குமார் கலைவாணி
நடிப்பு : சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஓய்.ஜி.மகேந்திரன், வித்யா, விஜே பப்பு
ஒளிப்பதிவு : ராஜா
இசை : அஷ்வின் ஹேமந்த்
வெளியான தேதி : மார்ச் 27, 2026
நேரம் : 2 மணிநேரம் 13 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
ஒரு டேட்டிங் ஆப்பை உருவாக்க போராடுகிறார் ஹீரோ சுதர்சன் கோவிந்த். விரைவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஹீரோயின் அர்ச்சனாரவி. ''உங்களுக்கு காதல் அனுபவம் இருந்தால் தான் உங்க வேலைகளை இன்னமும் சிறப்பாக செய்ய முடியும்'' என்று பிரஷர் வர, இரண்டுபேரும் தங்கள் தொழில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காதலிப்பது மாதிரி நடிக்கிறார்கள். அந்த காதல் ஒரு கட்டத்தில் உண்மை ஆக, அதேசமயம் 'சுயநலத்துக்காக' காதலிக்கப்பட்டோம் என இருவருக்கும் தெரிய, என்ன நடக்கிறது என்பது நீ பார்எவர் படக்கதை.
வழக்கமான காதல் கதையாக இல்லாமல், இன்றைய காதலின் நிலை, காதலர்களின் மனநிலை, டெக்னாலாஜி, கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து நீ பார்எவர் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் அசோக் குமார் கலைவாணி. ஹீரோவாக நடித்துள்ள சுதர்சன் பெரும்பாலான காட்சிகளில் சோகமாகவே இருக்கிறார். ஒரு சில இடங்கள், பாடல் காட்சியில் மட்டுமே பிரஷ் ஆக தெரிகிறார். அதுவே படத்தை ரொம்ப இறுக்கமாக்குகிறது. ஆனால் நடிப்பு விஷயத்தில் பாஸ் ஆகிறார்.
சினிமா இயக்குனராக வரும் ஹீரோயின் அர்ச்சனா ரவி கேரக்டர், அவர் நடிப்பு, காஸ்ட்யூம், டான்ஸ் எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கிறது. படத்தின் பெரிய பிளஸ் அவர்தான். பொள்ளாச்சி போர்ஷனில் அவர் நடிப்பும் கவர்கிறது. ஆனால் அவருக்கான சின்ன வயது பிளாஷ்பேக், அந்த பேக்கிரவுண்ட் காட்சிகளில் மட்டும் சினிமாதனம். அவர் ப்ரண்ட் ஆக வரும் சினேகாசக்தியும் துறுதுறு கேரக்டர். ஹீரோ பிரண்ட் ஆக வரும் விஜே பப்புவும் சின்ன சின்ன சேஷ்டைகளால் ரசிக்க வைக்கிறார்
காதலர்கள் சந்திக்கும் இடம், சண்டை, பிரிவு இதெல்லாம் ஓகே. ஆனால், கிளைமாக்ஸ் வழக்கமானது. ஹீரோ தாத்தாவாக, காதலை வெறுப்பவாக ஒய்.ஜி.மகேந்திரனை நடிக்க வைத்து இருக்கிறார்கள். அவர் நடிப்பில் அந்த கேரக்டரில் அவ்வளவு செயற்கை தனம். இன்னம் கொஞ்சம் இயல்பாக நடிக்க வைத்து இருக்கலாம். ஹீரோ அம்மாவாக வரும் வித்யா ஹோம்லியாக, காதலால் பாதிக்கப்பட்டவராக சிறப்பாக நடித்து இருக்கிறார். பாடகர் ஸ்ரீராம் போர்ஷன் வித்தியாசம். கவுரவ வேடத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் நிழல்கள்ரவி கலக்கியிருக்கிறார்.
காதல் கதைக்கு அஷ்வின் இசை, பாடல்கள் ஓரளவு கை கொடுத்து இருக்கிறது. சில இடங்களில், சின்ன, சின்ன வரிகள் பீலிங்கை கொடுத்து இருக்கிறது. காதலிக்கிறார்கள், சண்டைபோடுகிறார்கள், பிரிகிறார்கள், சேருகிறார்களா என்பது பல படங்களில் பார்த்த கிளைமாக்ஸ் ஆக இருக்கிறது. அந்த டேட்டிங் ஆப் விஷயத்தை இன்னும் தெளிவாக, இளமையாக சொல்லியிருக்கலாம். கிளைமாக்ஸ் எதிர்பார்த்த விஷயமாக இருக்கிறது. காதல் கதையில் கிளைக்கதைகள், அதில் சில மெசேஜ், கடைசியில் எல்லாம் சேருகிற மாதிரியான ஸ்கிரிப்ட் ஓகேதான். ஆனால், புதுமுகங்கள், ஏகப்பட்ட டயலாக், நீளமான சீன்கள் சோர்வை தருகிறது. கிளைமாக்ஸை கூட ஏகப்பட்ட வசனங்கள் பேசி, ஏதேதோ சீன்கள் வைத்து இழுத்து இருக்கிறார்கள். ஏதாவது புதுசாக சொல்லப் போகிறார்கள் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே பரிசு.
நீ பார்எவர் - தலைப்பு மார்டனாக இருந்தாலும், காதலை எதிர்க்கும் தாத்தா கதை.