உள்ளூர் செய்திகள்

லீடர்

தயாரிப்பு : லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரடக்ஷன்ஸ்
இயக்கம் : ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
நடிப்பு : லெஜண்ட் சரவணன், ஷாம், பாயல் ராஜ்புத், சந்தோஷ் பிரதாப், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர்
ஒளிப்பதிவு : வெங்கடேஷ் எஸ்.
இசை : ஜிப்ரான்
வெளியான தேதி : ஏப்ரல் 3, 2025
நேரம் : 2 மணிநேரம் 16 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

துாத்துக்குடியில் மெக்கானிக் வேலை செய்து கொண்டு, அன்பு மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார் ஹீரோ லெஜண்ட் சரவணன். வில்லன் சந்தோஷ் பிரதாப், பாகுபலி பிரபாகர் கும்பல் ஒரு நாசவேலை செய்து துாத்துக்குடி துறைமுகத்தை அழிக்க நினைக்கிறது. போலீஸ் எஸ்.பி. ஷாம், இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா டீம் அதை தடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், சில அதிரடி செயல்கள் மூலமாக எதிரிகளை, அவர்களின் திட்டங்களை அழிக்கிறார் ஹீரோ. அது ஏன்? அவர் பின்னணி என்ன? வில்லனுக்கும், அவருக்கும் என்ன பகை என்ற ரீதியில் செல்கிறது லீடர் கதை.

மெக்கானிக் ஏன் அதிரடி ஹீரோவாக மாறுகிறார்? அப்படி மாறி என்ன செய்கிறார் என்ற ஒன் லைனை பக்காக ஆக் ஷன் பாணியில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். ஹீரோவே தயாரிப்பாளர் என்பதை படத்தை பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார்கள். மெக்கானிக், பாசக்கார அப்பா கேரக்டருக்கு ஓரளவு பொருந்தி இருக்கிறார் ஹீரோ லெஜண்ட் சரவணன். மகள் பாசம், முதலாளி விடிவி கணேசுடன் வம்பு, வில்லன்களிடம் பணிவு என முதற்பாதியில் அவர் கேரக்டர் சாந்தமாக நகர்கிறது. இடைவேளையில் அவர் கேரக்டர் மாறுகிறது. யார் எதிர்பாராத ஒரு செயலை செய்கிறார். அந்த இடம் பக்கா ஹீரோயிசம்.

முன்னணி ஆக் ஷன் ஹீரோக்களுக்கு நிகராக சில கண்டெய்னர் பின்னணியில் அதை விறுவிறுப்பாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். அந்த சம்பவத்துக்குபின் அவர் யார் என்று போலீஸ் எஸ்பி ஷாம் விசாரிக்க, ஸ்பெஷல் டீம், மிஷன், தியாகம், ஹீரோயின் என அவரின் இன்னொரு ஆக் ஷன் முகம் தெரிகிறது. வில்லன்களை பழிவாங்க, துறைமுககத்தை, மகளை காப்பாற்ற துடிப்பதால் இடைவேளைக்குபின் சண்டை, ரத்தம், வெட்டு, குத்து, துப்பாக்கி என கதை செல்கிறது. ஆக் ஷன் காட்சிகளிலும் லெஜண்ட் சரவணன் ஈடுபாடு ஓகே. டயலாக் டெலிவரியில் மட்டும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஷாம் நடிப்பும், துறைமுக கண்டெய்னர் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா கேரக்டரும் கதைக்கு பலம். பாகுபலி பிரபாகருக்கு வழக்கமான வில்லன் கேரக்டர். அவர் பாஸ் ஆக வரும் சந்தோஷ் பிரதாப் நடிப்பு, அவர் கேரக்டர் பின்னணி சிறப்பு.
இவர்களை தவிர, விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, கதிர் ஆங்காங்கே கலகலப்பை கொடுத்திருக்கிறார்கள். அதனால், முதற்பாதியில் தொய்வு இல்லை. இடைவேளைக்குபின் சண்டை, சண்டை, சண்டை. அதில் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்களை சேர்ந்திருந்தால் படத்தை இன்னும் ரசித்து இருக்கலாம்.
ஹீரோயினாக ராஜ்புத் இருந்தாலும் அவருக்கு கலர்புல் பாடல் காட்சி, முக்கியத்துவமான காட்சிகள் அதிகம் இல்லை. ஒரு ஆபரேஷனில் மட்டும் அவர் பங்களிப்பு பிரமாதம். மலையாள நடிகர் லால் கேரக்டரை இன்னும் அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம். ஹீரோ மகளாக நடித்த இயல் முகமும், நடிப்பும், அவரின் சில டயலாக்கும் டச்சிங்.

துாத்துக்குடி துறைமுகம், அதில் நடக்கும் விஷயங்கள், அதை சுற்றி நடக்கும் பிரச்னைகள், சண்டைகாட்சிகள் விறுவிறுப்பு. ஆனால், பிற்பாதியில் வரும் வெளிநாடு சம்பந்தப்பட்ட பிரமாண்ட சண்டைக் காட்சியில் ஈர்ப்பு அதிகம் இல்லை. அவ்வளவு செலவு செய்தது எடுத்தது படத்துக்கு பிளஸ் ஆக இல்லை. வந்தே பாரத் ரயில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டல். இயக்குனருக்கு பின் அதிகமாக வேலை செய்தது பைட் மாஸ்டர் மகேஷ் மாத்யூவாகதான் இருக்கும். அவரின் பங்களிப்பு படத்துக்கு பிளஸ். பல காட்சிகளை விறுவிறுப்பாக காண்பிக்கிறது வெங்கடேஷ் கேமரா. முத்தைத் திரு பாடல் உள்ளிட்ட பல படங்களில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

முதற்பாதி படம் வேகமாக நகர்கிறது. அட, ஹீரோ முதல் படத்தை விட இதில் சிறப்பாக நடித்து இருக்கிறார் என சொல்ல தோன்றுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் பல தடைகள், ஹீரோ பின்னணி, அந்த டீமில் நடக்கும் விஷயங்கள், வெளிநாட்டு போர்ஷன் கதையுடன் ஒட்டவில்லை. ஆசிரமம் போர்ஷன், அம்ரிதா நடிப்பும் சினிமாதனம் ஆனாலும், கிளைமாக்ஸ் பைட் அதை ஈடு செய்கிறது. அடுத்த பாகம் உண்டு என படத்தை முடிக்கிறார்கள்.

லீடர் - அப்பா பாசம் கலந்த ஆக் ஷன் படம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !