உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / கார்மேனி செல்வம்

கார்மேனி செல்வம்

தயாரிப்பு : பாத்வே புர டக் ஷன்ஸ்
இயக்கம் : அருண்சக்ரி
நடிப்பு : சமுத்திரக்கனி, லட்சுமிப்ரியா, கவுதம் மேனன், அபிநயா
ஒளிப்பதிவு : யுவராஜ் தக் ஷன்
இசை : ராகவ் ரமேஷ்
வெளியான தேதி : ஏப்ரல்3, 2026
நேரம் : 2 மணிநேரம் 24 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

டாக்சி டிரைவராக இருக்கும் சமுத்திரக்கனி, ரோட்டு ஓரம் இட்லி கடை நடத்தும் லட்சுமிப்ரியா தம்பதிகளுக்கு கார் வாங்க வேண்டும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக கடன் வாங்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் கெட்ட நேரம் கடனாளி ஆகிறார்கள். அவமானம், கடன்காரர்கள் துரத்த வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார் சமுத்திரக்கனி. அவர் இந்தியா திரும்பினாரா? கடன் பிரச்னைகள் தீர்ந்ததா? அவர்கள் நினைத்த கார், வீட்டை வாங்க முடிந்ததா? இதுதான் கார்மேனிசெல்வம் கதை.

இது, அக்மார்க் சமுத்திரக்கனி படம் என சொல்லலாம். அதற்கேற்ப அவரும் நடுத்தர, மாதந்தோறும் பணப்பிரச்னையில் கஷ்டப்படும் இந்திய குடிமகனாக நடித்து இருக்கிறார். கொஞ்சம் பணக்காரர்களாக இருக்கும் கவுதம் மேனன், அபிநயா தம்பதி வீட்டில் டிரைவராக இருக்கும் சமுத்திரக்கனியின் தவறான முடிவுகள், பணம் சம்பாதிப்பது பற்றிய அவரின் முடிவுகள், குடும்ப சிக்கல்கள், வெளிநாட்டு வாழ்க்கை என பல விஷயங்களை கதை பேசுகிறது.
நடுத்தரவயது குடும்ப தலைவராக, கொஞ்சம் ஆர்வக்கோளாறு பார்ட்டியாக, பாசக்கார கணவனாக, விசுவாச டிரைவராக வருகிறார் சமுத்திரக்கனி. அவரின் கேரக்டர், செயல்களை நம் பலரிடம் பார்த்து இருப்போம். நம்மிடையேயும் அது உண்டு என்ற டச்சிங் படத்தை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, கணவன் மனைவி குடும்ப சண்டை, சொந்தகாரர்களிடம் அவமானம், பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சில விஷயங்களால் சிக்கி தவிப்பது ஆகிய இடங்களில் சமுத்திரக்கனி நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார். என்ன, சில இடங்களில் நாடகத்தனம் எட்டிப்பார்ப்பது மைனஸ்.

சமுத்திரக்கனி மனைவியாக வரும் லட்சுமி ப்ரியா நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சி. நடுத்தர குடும்ப பெண்ணாகவே வாழ்ந்து இருக்கிறார். பணம் சேமிப்பது, நாத்தனார் குடும்ப நிகழ்ச்சியில் ரோஷம் காண்பிப்பது, பணத்துக்காக கணவன் ஓடும்போது கோபப்படுவது, கடன்காரர்களால் அவமானப்பட்டு தவிப்பது, பொருளாதார பிரச்னை என பல இடங்களில் பண்பட்ட நடிப்பை தந்து இருக்கிறார். பல பெண்கள் இந்த கேரக்டரை பார்த்து பரிதாபப்படுவார்கள், பல ஆண்டுகள் திருந்துவார்கள். இவர்கள் மகனாக வரும் சிறுவன் கரன் சக்ரவர்த்தியும் மனதில் நிற்கிறான்.

கவுதம்மேனன், அபிநயா சம்பந்தப்பட்ட காட்சிகள் கதைக்கு எனர்ஜி. இரண்டு கேரக்டர்களும் அவ்வளவு பாசிட்டிவ் ஆக இருப்பதும், அவர்களின் நடிப்பும் கியூட். இப்படிப்பட்ட முதலாளிகள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என பலர் நினைப்பது நிச்சயம். என்ன, அபிநயா முடிவு பல படங்களில் பார்த்த சினிமாத்தனம். இவர்களை தவிர சமுத்திரக்கனி தங்கை, அவர் கணவர், வெளிநாடு வாழ் நண்பர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர் முல்லை கோதண்டம் ஆகிய கேரக்டர்களும் மனதில் நிற்கிறது. வெளிநாட்டு காட்சியின் நீளத்தை குறைத்து இருக்கலாம். யுவராஜின் வீடு, கார் சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவு நச். ராகவ் இசை ஓகே.

பணத்தை சேமிக்க நினைக்கும், பணத்தை சம்பாதிக்க நினைக்கும், பணப்பிரச்னைகளால் தவிக்கும் பல குடும்பங்கள் நிலையை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, சின்ன, சின்ன சீன்கள், சில டயலாக்குகள் மனதை உலுக்குகிறது. வாழ்க்கை குறித்த தத்துவங்கள் ஆங்காங்கே சொல்லப்படுகிறது.

டாக்சி டிரைவர்களின் வாழ்க்கை, வலிகளை சமீபத்தில் எந்த படமும் இப்படி விரிவாக சொன்னது இல்லை. முதற்பாதியில் இயல்பாக நகரும் கதை, அடுத்த பாதியில் திணறுகிறது. சமுத்திரக்கனியின் ஆர்வக்கோளாறு செயல்கள், அடுத்து நடக்கும் விஷயங்கள் போரடிக்கிறது. அதேபோல் எடிட்டிங் பாணியும் குழப்புகிறது.

வெளிநாட்டு வாழ்க்கை என்பது சாபம் என்றாலும், அங்கே போக வேண்டாம் என்ற எண்ணத்தை வலிந்து திணிக்கிறார் இயக்குனர். அது எப்படி சாத்தியம்? சில இடங்களில் அநியாயத்துக்கு நல்லவராக நடித்து கொட்டுகிறார் சமுத்திரக்கனி. அந்த இடங்கள் இயல்பாக இருந்தால் படம் இன்னும் அழகாக இருக்கும். படத்தின் நீளத்தை குறைத்து இருந்தாலும் இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்து இருக்கும்.

சில, பல குறைகள் இருந்தாலும் படம் முடியும்போது தேவையில்லாத பொருட்களை வாங்கக்கூடாது. வீண் ஆசையை வளர்க்க கூடாது. பந்தாவுக்காக பணத்தை செலவழிக்க கூடாது. அகலகால் வைக்க கூடாது. குடும்பம், மனைவி, குழந்தைகள் முக்கியம் என உணர்வை கதை கொடுக்கிறது.

கார்மேனி செல்வம் - விசு, வி.சேகர் படம் பார்த்த மாதிரி இருக்கிறது



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !