உள்ளூர் செய்திகள்

காளிதாஸ் 2

தயாரிப்பு : ஸ்கை பிக்சர்ஸ்
இயக்கம் : ஸ்ரீ செந்தில்
நடிப்பு : பரத், அஜய்கார்த்தி, சங்கீதா, பவானிஸ்ரீ, அபர்ணதி, பிரகாஷ்ராஜ்
ஒளிப்பதிவு : சுரேஷ்பாலா
இசை : சாம்.சி.எஸ்.
வெளியான தேதி : ஏப்ரல் 3, 2026
நேரம் : 2 மணிநேரம் 17 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

500 வீடுகளுக்கு அதிகமாக இருக்கும் ஒரு குடியிருப்பில் நடக்கும் நியூ இயர் கொண்டாட்டத்தில் ஒரு சின்ன குழந்தை திடீரென காணாமல் போகிறது. அஸிஸ்டென்ட் கமிஷனர் பவானிஸ்ரீ, இன்ஸ்பெக்டர் பரத் தலைமையிலான டீம் குழந்தை பற்றி விசாரிக்க, மறுநாள் குழந்தை பிணமாக கிடைக்கிறது. அந்த குடியிருப்பில் வசிக்கும் அஜய் கார்த்தி மீது போலீசுக்கு சந்தேகம் வர, அவரை விசாரிக்கிறார்கள். பிரபல வக்கீல் பிரகாஷ்ராஜ் உதவியுடன் அவர் ஜெயிலுக்கு போகாமல் எஸ்கேப் ஆகிறார். சில நாட்கள் கழித்து இன்னொரு கொலையும் அதே குடியிருப்பில் நடக்கிறது. அங்கே வசிக்கும் பூவே உனக்காக சங்கீதா உட்பட பலர் பதறுகிறார்கள். வெளியே இன்னும் சில ரவுடிகள் கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளை செய்தது யார்? பின்னணி என்ன? கொலையாளிகளை போலீஸ் பிடித்ததா? இதுதான் காளிதாஸ் 2 படத்தின் கரு.

2019ல் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்த காளிதாஸ் படத்துக்கும், இந்த பாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த பட கேரக்டர், தொடர்ச்சி இந்த படத்திலும் எதுவும் இல்லை. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பரத் கூட முதற்பாகம் அளவுக்கு ஸ்கோர் பண்ணவில்லை. உயர் அதிகாரியான பவானிஸ்ரீக்கு அடங்கி போகிற இன்ஸ்பெக்டராக அமைதியாக நடித்து இருக்கிறார். பல சீன்களில் ரொம்பவே இறுக்கமாக வருகிறார். அவருக்கு ஜோடி கிடையாது. கிளைமாக்சுக்கு முன்பு ஒரு விஷயத்தை கண்டுபிடித்து, சில விஷயங்களை செய்கிறார். அந்த இடத்தில் மட்டுமே அந்த கேரக்டர் மனதில் நிற்கிறது. ஹீரோயிசம் அதிகம் இல்லாத இந்த கதையில் அவர் ஹீரோவாக நடித்தது ஏனோ?

ஒரு கட்டத்தில் இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படமோ என்று நினைக்கும் அளவுக்கு ஏ.சியாக வரும் பவானிஸ்ரீ கேரக்டர், நடிப்பு ஆக்கிரமிக்கிறது. அதை உணர்ந்து அவரும் கம்பீரமாக, மிரட்டலாக நடித்து இருக்கிறார். என்ன, இடைவேளைக்குபின் அந்த கேரக்டரும் ஏமாற்றுகிறது. இவர்களை தவிர, குழந்தையை பறிகொடுக்கும் தாய் ஆக வரும் அபர்ணதி அவ்வப்போது வந்து உருக்கமாக நடிக்கிறார். அவரின் பிளாஷ்பேக் சீன் புதுசு.

கொலையாளியாக போலீஸ் சந்தேகப்படும் கேரக்டரில் புதுமுக அஜய் கார்த்தி ரொம்பவே அமைதியாக வந்து போகிறார். சில இடங்களில் அவரின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு ஓகே. இந்த படத்தில் இவருக்கு ஏன் முக்கியத்துவம் ஏன் என்று பார்வையாளர்கள் கேட்கலாம். அவர் தயாரிப்பாளரின் மகன். இவரை காப்பாற்றுகிற ஒரு சில சீன்களில் சீனியர் வக்கீலாக வருகிறார் பிரகாஷ்ராஜ். அவருக்கு வயதாகிவிட்டது என்பது தெரிகிறது. அந்த கேரக்டர் ஏதோ செய்யப் போகிறது. கிளைமாக்சில் வந்து கலக்கப்போகிறது என்று நினைத்தால், கால்ஷீட் பிரச்னையா என தெரியவில்லை. பிரகாஷ்ராஜை அப்புறம் காணவில்லை. இன்னொரு முக்கியமான கேரக்டரில் வரும் ஆடுகளம் கிஷோரும் ஒரு சில சீன்களில் காணாமல் போகிறது. இப்படி பல கேரக்டர் முழுமையடையாமல் இருப்பது, திறமை வாய்ந்த இந்த நடிகர்களை பயன்படுத்தாததும் பெருங்குறை. சின்ன குழந்தைகளை கொல்லும் சைக்கோதன திரைக்கதை பாணியில் இருந்து தமிழ் சினிமா மீள்வது எப்போதும் என்றும் தெரியவில்லை.

25 ஆண்டுகளுக்குபின் பூவே உனக்காக சங்கீதா ரீ என்ட்ரி ஆகி நடித்து இருக்கிறார். ஒரு ஸ்பெஷல் பாடலுடன் என்ட்ரி ஆகிறார். குழந்தை காணாமல் போக, அதை தேடும் அபார்ட்மென்ட் வாசியாக, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பவராக வருகிறார். இந்த படத்தில் சங்கீதா நடிக்க என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே இருந்தால், கிளைமாக்சில் அந்த கேரக்டர் செய்யும் செயல்கள், அவரின் நடிப்பு சூப்பர். சங்கீதா ரீ என்ட்ரிக்கு சரியான தீனி. சங்கீதா சம்பந்தப்பட்ட சீன்கள்தான் காளிதாஸ் 2 கதையின் உயிர்நாடி.

திரில்லர் கதை விறுவிவிறுப்பாக நகர வேண்டும் என்பது விதி. காளிதாஸ் 2 முதற்பாகம் ரொம்பவே ஸ்லோ. அவ்வப்போது புதுக்கேரக்டர் அறிமுகம் ஆவது, டுவிஸ்ட் இதெல்லாம் ஓகே. ஆனால், போலீஸ் விசாரணை, கொலையாளி யார் என்ற காட்சியில் பரபரப்பு இல்லை. பிளாஷ்பேக் சீன் அழுத்தமாக இருந்தாலும், அது கதையுடன் சரியாக செட்டாகவில்லை. கிளைமாக்சில் கூட உயர் அதிகாரிகளுக்கு சொல்லாமல் ஒரு இன்ஸ்பெக்டர் இப்படி தன்னிச்சையாக எங்கேயாவது போக முடியுமா? என்ற கேள்வி படத்தின் பலவீனம். சாம் சி.எஸ். இசை ஓகே ரகம். சுரேஷ் பாலாவின் கேமிரா வொர்க் அப்படியே.

கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் கதை என்ற திரில்லர் பாணியில் ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும், காளிதாஸ் 2 வித்தியாசமானது. சில குற்றபின்னணி காரணமாக இவர்தான் கொலையாளி என ஒருவரை போலீஸ் சந்தேகப்படுகிறார்கள். அவரின் செயல்பாடுகளும் அப்படிதான் இருக்கிறது. ஆனால், அவர் கொலையாளி இல்லை, இன்னொருவர் என கதை நகர்கிறது. கடைசியில் அதிலும் டுவிஸ்ட். ஆக, கடைசி 20 நிமிட படம்தான் காளிதாஸ் 2 படத்தின் உயிர். அது மட்டும் இல்லாமல் இருந்தால் படம் இன்னும் மோசமாக விமர்சிக்கப்பட்டு இருக்கும். என்ன, கிளைமாக்ஸ்க்காக இரண்டு மணி படத்தையும் பொறுமையாக பார்க்கிற மனநிலை உங்களுக்கு இருக்க வேண்டும். 3ம் பாகம் உண்டு என முடிக்கிறார்கள்.

காளிதாஸ் 2 - தமிழ் சினிமாவில் முதற்பாகம் மாதிரி இரண்டாம் பாகம் வெற்றி அடைவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்த படம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !