பிரதிச்சாயா (மலையாளம்)
தயாரிப்பு : ஸ்ரீ கோகுலம் மூவிஸ்
இயக்கம் : பி உன்னிகிருஷ்ணன்
நடிப்பு : நிவின்பாலி, பாலச்சந்திர மேனன், ஹரிஸ்ரீ அசோகன், மணியம்பிள்ள ராஜு, சராப் யு தீன், சாய்குமார், சபிதா ஆனந்த்
ஒளிப்பதிவு : சந்துரு செல்வராஜ்
இசை : ஜஸ்டின் வர்கீஸ்
வெளியான தேதி : மார்ச் 26, 2026 நேரம்
நேரம் : 2 மணி நேரம் 42 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
முதல்வராக இருக்கும் பாலச்சந்திர மேனன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்த ஏற்பாடு செய்து, அதன்மூலம் அவரை ராஜினாமா செய்ய வைக்க திட்டமிடுகிறார் கட்சித் தலைவர் ஹரிஸ்ரீ அசோகன். திட்டமிட்டபடி அந்த அவதூறு நடப்பதால் அந்த அவமானத்தால் அன்று இரவே மரணம் அடைகிறார் பாலச்சந்திர மேனன். அதுமட்டுமல்ல அவரது இளைய மகன் நிவின்பாலி தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்துள்ளார் என குற்றம் சாட்டி அமலாக்கத்துறை விசாரிக்கிறது. ஆனால் விசாரணையில் அவர் அந்த பணம் முழுவதையும் ஆதரவற்ற அமைப்புகள் பலவற்றுக்கு நன்கொடையாக கொடுத்த விவரம் தெரியவந்து அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்படுகிறார்..
தந்தையின் மறைவுக்கு பின் அவரது மூத்த மகன் முதல்வராக தயாராக, கட்சித் தலைவரோ தன் பெயரை முதல்வராக பரிந்துரை செய்ய எம்எல்ஏக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். ஆனால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து தற்போது மக்களின் செல்வாக்கு நிவின்பாலிக்கு தான் அதிகம் இருக்கிறது, அவரை முதல்வர் ஆக்குவோம் என்று கூறுகிறார்கள். வேறு வழியின்றி இருவரும் ஒப்புக்கொண்டு நிவின்பாலியை முதல்வர் ஆக்குகிறார்கள். நிவின்பாலி தன் கைப்பாவையாக பயன்படுத்த கட்சித் தலைவர் நினைக்க, அவரோ என் வழி தனி வழி என பயணிக்கும் முடிவை எடுக்கிறார். இதன் பிறகு அரசியல் களத்தில் நடக்கும் சதுரங்க ஆட்டம் தான் மீதிக்கதை.
முதல்வரின் மகன் என்கிற கதாபாத்திரம் செட் ஆன அளவிற்கு, முதல்வர் என்கிற கதாபாத்திரம் நிவின்பாலிக்கு செட்டாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் தந்தை மகன் பாசத்துடன் சென்டிமென்டாக கடந்து செல்பவர், இரண்டாம் பாகத்தில் தன்னுடைய அரசியல் எதிரிகளையும் துரோகிகளையும் கையாளும் விதத்தில் சபாஷ் போட வைக்கிறார்.
நிவின்பாலியின் தந்தையாக, முதல்வராக நடிகர் பாலச்சந்திர மேனன்.. இதற்கு முன்னதாக முதல்வராக இருந்து மறைந்த ஒரு முன்னாள் கேரள முதல்வர் ஒருவரை பிரதிபலிக்கும் விதமான தோற்றம்.... சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கட்சித் தலைவராக ஹரிஸ்ரீ அசோகன், பல வருடங்களாக நகைச்சுவை நடிகராக பார்த்து வந்த இவரை கொஞ்சம் சீரியஸான ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பது புதுசாக இருக்கிறது. அவரும் அந்த கதாபாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இன்டர்நேஷனல் அளவில் மாபியா தலைவராக கேரள அரசியலில் தான் நினைத்ததை சாதிக்க முயற்சிக்கும் கதாபாத்திரத்தில் ஷராப் யு தீன் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்,
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் நேர்மை காரணமாக நம்மை ஆச்சரியப்படுத்துகிறது சாய்குமார் கதாபாத்திரம். நிவின்பாலியின் அம்மாவாக வரும் சபிதா ஆனந்த் தவிர மற்ற பெண்கள் கதாபாத்திரம் எதுவும் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சொல்லப்போனால் படத்தில் கதாநாயகி என்கிற ஒருவரே இல்லை என்று சொல்லலாம்.
அரசியல் களத்தை பரபரப்பாக்கி காட்டும் விதமாக துடிப்புடன் வேலை செய்திருக்கிறது சந்து செல்வராஜின் கேமரா. ஜஸ்டின் வர்கீஸ் பின்னணி இசையும் ஓரளவு பக்க பலமாக பயணித்திருக்கிறது.
முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் அதுவும் ஒரு கட்சிக்குள் நடக்கும் குழப்பத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பரத் அனே நேனு படத்தின் தழுவல் போலத்தான் இந்த படம் இருக்கிறது. கமர்சியலான அரசியல் பின்னணி கொண்ட படங்களை கொடுப்பதில் கெட்டிக்காரரான பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இன்னும் கொஞ்சம் எளிய மக்களுக்கும் புரியும் விதமாக கொடுத்திருக்கலாம்.
பிரதிச்சாயா - குருவி தலையில் பனங்காய்