முத்து என்கிற காட்டான் (வெப்சீரிஸ்)
தயாரிப்பு, வெளியீடு : ஜியோ ஹாட்ஸ்டார்
இயக்கம் : மணிகண்டன், அஜித்குமார்
நடிப்பு : விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், முத்துகுமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன், ரிஷா, விஜே பார்வதி மற்றும் பலர்
ஒளிப்பதிவு : மது, சண்முகசுந்தரம்
இசை : ராஜேஷ் முருகேசன்
வெளியான தேதி : மார்ச் 27, 2026
நேரம் : பத்து எபிஷோடு ( 5 மணிநேரம் 30 நிமிடம்)
ரேட்டிங் : 2.5 / 5
தென் தமிழக கிராமப்புறத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனை மூடும் நிலை. காரணம், வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. அந்த சமயத்தில் விஜய் சேதுபதியின் தலை, பக்கத்தில் ஒரு கடிதம், 2 லட்சம் பணம் கிடைக்க, அப்பாடா இனி போலீஸ் ஸ்டேனை மூட மாட்டார்கள் என நினைத்து விஜய் சேதுபதியின் உடல், கொலைக்கான காரணத்தை போலீசார் தேடுகிறார்கள். அந்த வழக்கு மதுரை, புதுக்கோட்டை, கேரளா என பல இடங்களுக்கு செல்கிறது. முத்து என்கிற காட்டான் என அழைக்கப்படுகிற விஜய் சேதுபதி யார்? 1997 முதல் 2013ம ஆண்டு வரை அவர் எங்கெல்லாம் இருந்தார், என்னவெல்லாம் செய்தார். அவரை கொலை செய்தது ஏன்? என்ற பார்வையில் இந்த வெப்சீரிஸ் கதை நகர்கிறது.
காக்கா முட்டை, கடைசி விவசாயி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இந்த வெப்சீரிசை இயக்கி உள்ளனர். ஆரம்பத்தில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகள், கேஸ் கிடைக்காமல் போலீஸ்காரர்களான முத்துகுமார், சிங்கம்புலி, வடிவேல் முருகன் அலைவது, ஆட்டு வியாபாரம், மாமியார் மருமகள் சண்டை கதை மெதுவாக தொடங்குகிறது. விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை கிடைத்தவுடன் கதை சூடுபிடிக்கிறது. வாட்ச் மெக்கானிக், அனாதை இல்ல மானேஜர், யானை பாகன், ஆட்டு புழுக்கை வியாபாரி, நடன குழு பாதுகாவலர் என பல வேலைகளை அவர் செய்கிறார். கடைசியில் அந்த வேலைகளை ஏன் செய்தார்? அதன் பின்னணி என்ன என்பதை சொல்லியிருக்கிறார்கள். விஜய் சேதுபதிதான் ஹீரோ என்றாலும், அவருக்கான ஹீரோயிசம், பில்டப் ரொம்ப குறைவு.
ஒரு வயதான சர்வருக்கு ஓட்டல் வாங்கி தருவது, நடன குழு பெண்களுக்கு பாதுகாப்பு, ஆட்டை புழுக்கை வியாபாரம், கடைசியில் 2 சம்பவங்கள் செய்வது என சில இடங்களில் மட்டும் விஜய் சேதுபதி கேரக்டர் பேச வைக்கிறது. ஆனால் சீரிஸ் முழுக்க அவர் நடிப்பில் பெரிய வித்தியாசம், பரபரப்பு இல்லை. பெரும்பாலான காட்சிகளில் அவர் அமைதியாக இருக்கிறார். மெதுவாக பேசுகிறார். ஒரு திரில்லர் வெப்சீரிஸ்க்கு இதெல்லாம் ஸ்பீடு பிரேக்கர். அவர் கேரக்டர் குறித்த பின்னணியிலும் ஏகப்பட்ட குழப்பங்கள், குறிப்பாக, கிளைமாக்ஸ் பலருக்கு பிடிபடவே இல்லை
விஜய் சேதுபதி பற்றி விசாரிக்கும் போலீஸ்காரர்களாக முத்துகுமார், சிங்கம்புலி, வடிவேலு முருகன் கலக்கியிருக்கிறார்கள். வெப்சீரிஸ் உயிரோட்டம் இவர்கள் சம்பந்தப்பட்ட சீன்தான். அதிலும் வடிவேலு முருகன், வி.ஜே.பார்வதி சம்பந்தப்பட்ட சீன்கள் இந்த கதைக்கு சம்பந்தம் இல்லாதது. பல படங்களில் வில்லனாக நடித்த மிலிந்த் சோமனுக்கு இதில் பாசிட்டிவ்வான தொழிலதிபர் வேடம். அவரின் உதவியாளராக வருகிறார் விஜய்சேதுபதி. மிலிந்த்துக்கு என்ன நடக்கிறது. விஜய்சேதுபதி என்ன செய்கிறார் என்பது கதையின் முக்கியமான விஷயங்கள். மிலிந்த் சோமனையும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. கேரள விசாரணை காட்சிகள் ரொம்ப ஸ்லோ. திருவிழா செட், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளை மது, சண்முக சுந்தரம் அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். இசை சுமார் ரகம். 1997 முதல் 2013 வரை கதை நடந்தாலும் அந்த கால விஷயங்கள் பதிவு செய்யப்படவில்லை.
பல படங்களில் குத்தாட்டம் போட்ட ரிஷா, இதில் மேடை டான்ஸர் ஆக வருகிறார். அவர்தான் விஜய் சேதுபதிக்கு ஜோடி. இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும், ரிஷாவின் நடிப்பு ஓகே. இன்னொரு டான்சராக வரும் அபி நட்சத்திரா வந்து போகிறார். ஜொள்ளு பார்ட்டியாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் மிரட்டியிருக்கிறார். தமிழக போர்ஷனில் இருக்கும் விறுவிறுப்பு, கேரள போர்ஷனில் இல்லை. அதுவே வெப்சீரிசை இழு, இழுவென இழுக்கிறது. கடைசி 2 எபிஷோட்டில இருக்கும் வேகம், மற்ற 8ல் குறைவு. 10 எபிஷோடு என்பதை இன்னும் குறைத்து, இன்னும் எடிட் செய்திருக்கலாம்.
பொதுவாக, திரில்லர், கொலை, விசாரணை சம்பந்தப்பட்ட கதைகள், அதிலும் ஓடிடி கதைகள் படுவேகமாக, விறுவிறுப்பாக செல்லும். அது முத்து என்கிற காட்டானில் மிஸ்சிங். விஜய்சேதுபதியின் நடிப்பும் பெரிதாக உதவவில்லை. வெறும் தலையை வைத்துக் கொண்டு விசாரணை தொடங்கும் போலீஸ், அந்த தலைக்கு சொந்தகாரர் யார் என்ற கரு அருமயைாக இருந்தாலும், அதை சொன்ன விதத்தில் குழப்பி இருக்கிறார்கள். அதில் சுவாரஸ்யம் இல்லை. கிளைமாக்ஸ் தெளிவில்லாமல் இருக்கிறது. மணிகண்டன் ஸ்கிரிப்ட், இயக்கத்தில் உருவான கதையா இது என சந்தேகம் வருகிறது. அந்தளவுக்கு பல இடங்களில் வீக்னஸ்.
முத்து என்கிற காட்டான் - ஒரு திரில்லர் கதையை டிராமாவாக மாற்றி குழப்பி இருக்கிறார்கள்