உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை கார்த்திகை தீபத்துக்கு 2,500 பஸ்கள் இயக்கம்

தி.மலை கார்த்திகை தீபத்துக்கு 2,500 பஸ்கள் இயக்கம்

 திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு 2500 சிறப்பு பஸ்கள் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் கார்த்திகை தீபம் திருவிழா டிச. 10ல் நடக்கிறது. விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: தீபத் திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலையை இணைக்கும் ஒன்பது சாலைகளில் 2420 பஸ்கள் நிறுத்த 15 தற்காலிக பஸ் நிலையங்கள்; 85 இடங்களில் 24 ஆயிரம் கார்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்படும். இதற்கான முன்பதிவு இணையதளத்தில் செய்யப்படும். தமிழகம் முழுவதும் இருந்து 2500 சிறப்பு பஸ்கள் 6500 முறை இயக்கப்படும். 2000 பஸ்கள் வந்து செல்ல வசதியாக 500 பஸ் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும்.போக்குவரத்து துறையினர் ஆட்டோ கட்டணம் 2.5 கி.மீ. வரை 20 ரூபாய் அதற்கு மேல் 25 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர். தென்னக ரயில்வே சார்பில் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பக்தர்கள்கூட்டம் அதிகமாக இருந்தால் விழுப்புரம், வேலுார் மார்க்கத்தில் 650 கூடுதல் சிறப்பு பஸ்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

பாதுகாப்பு பணியில் 8500 போலீசார் 447 தீயணைப்பு வீரர்கள் 29 தீயணைக்கும் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும். சிறப்பு தரிசன டிக்கெட் 1100 பேருக்கு மட்டும் இணையதளத்தில் வழங்கப்படும். துணிப்பை எடுத்து வரும் பக்தர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் குலுக்கல் முறையில் 12 பேருக்கு தங்க நாணயம் 72 பேருக்கு வெள்ளி நாணயம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்தர் ரெட்டி எஸ்.பி. சாமுண்டீஸ்வரி மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகர் கூடுதல் ஆணையர் திருமகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !