ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு ரூ.3 லட்சத்தில் ஷவர் குளியல் வசதி
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானை ஆண்டாளுக்கு, கோவில் வளாகத்திற்குள்ளேயே ‘ஷவர்’ அமைத்து குளியலுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்வுகளில், யானை ஆண்டாள் பங்களிப்பு இருக்கும். எனவே, ஆண்டாள் பராமரிப்புக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கோவில் யானையை, பாகன்கள் குளிக்க வைத்தனர். கோடை காலத்தில், திருச்சியில், 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் நிலவும். அந்த காலக்கட்டத்தில், குழாய்களில் வரும் தண்ணீரை பீய்ச்சியடித்து, கோவில் யானையை குளிக்க வைக்கும் நிலை இருந்தது.
இந்த சிரமத்தை தவிர்க்க, கோவையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், ‘ஷவர்’களுடன் கூடிய குளியல் வசதி செய்து தர முன்வந்தார். அதன்படி, வேணுகோபால் சன்னதிக்கு பின்னால், அன்னதான மண்டபத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளி கல் மேடையில், 400 சதுர அடி பரப்பில், 3 லட்சம் ரூபாய் செலவில், ‘ஷவர்’ குளியல் சாதனங்கள் நிறுவப்பட்டது. மோட்டார் பம்ப் மூலம், 18 அடி உயரத்திற்கு குழாய்களில் ஏற்றப்படும் தண்ணீர், 10 ஷவர்களில் துாறல்களாக கொட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஷவர்’களுக்கான தண்ணீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த வால்வு பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ‘ஷவர்’, கோவில் யானையை குளிக்க வைக்க, நேற்று, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. புதிதாக நிறுவப்பட்ட ‘ஷவர்‘ குளியல், மழையில் குளிப்பது போன்ற அனுபவத்தை அளிப்பதால், 41 வயதான ஆண்டாள், நேற்று உற்சாகமாக காணப்பட்டது. திருவனைக்காவல் ஜம்புகேஸ்வரர்– அகிலாண்டேஸ்வரி கோவில் யானை அகிலாவுக்கு, கடந்த மே மாதம் ஷவர் வசதி செய்யப்பட்டது.