உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை செல்லும் இருதய நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சபரிமலை செல்லும் இருதய நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சபரிமலை: இருதய நோய் உள்ளவர்கள் சபரிமலை செல்லும் போது மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது, மருந்து குறிப்புகளுடன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி 10 நாட்கள் கடந்த நிலையில் மாரடைப்பால் 34 பேர் சன்னிதானம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதில் ஐந்து பேர் இறந்தனர். 29 பேர் காப்பாற்றப்பட்டனர். 2017–-18 சீசனில் 281 பேர் சிகிச்சை பெற்றதில்  36 பேர் இறந்தனர். 2018-–19 சீசனில் 173 பேர் சிகிச்சை பெற்றதில் 24 பேர் இறந்தனர்.

இதையடுத்து  பம்பை முதல் சன்னிதானம் வரை 24 மணி நேரமும் இயங்கும் ஐந்து இருதய நோய் சிகிச்சை மையங்கள்  திறக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய முதலுதவி மையங்கள் ஹாட்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு  இருதய நோய் கிசிக்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பத்தணந்திட்டை, கோட்டயம் மருத்துவமனைகளுக்கு கொண்டு  செல்லப்படுகின்றனர். பொதுவாக இருதய நோய்க்கு மருந்து சாப்பிடுவர்கள்  கண்டிப்பாக சபரிமலை வரும்போதும் மருந்து சாப்பிடவேண்டும். அவசியம் மருத்துவ குறிப்புகளை கையில் வைத்திருக்க வேண்டும். இது சபரிமலையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். பயணம் தொடங்கும் முன்னர் சிகிச்சை பெற்று வரும் டாக்டர்களின் ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும். மிகமிக மெதுவாக மலையேற  வேண்டும். முடியாதவர்கள் டோலியில் வரவேண்டும். அசாதாரண நிலை தோன்றினால் பக்கத்தில் உள்ள மருத்துவ உதவி மையத்துக்கு செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !