சபரிமலையில் சந்தனம் அரைத்து பிரசாதம்: தேவசம்போர்டு ஆலோசனை
சபரிமலை: சபரிமலையில் இயந்திர உதவியுடன் சந்தனம் அரைத்து பிரசாதமாக வழங்குவது பற்றி திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது.
சபரிமலையில் களபாபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கு ஏலம் மூலம் சந்தனம் வாங்கப்படுகிறது. இந்த சந்தனத்தின் தரம் குறித்து சந்தேகம் இருந்து வருகிறது. இந்நிலையில் தேவசம்போர்டே நேரடியாக சந்தன கட்டைகளை வாங்கி இயந்திரம் மூலம் அரைத்து பயன்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது. கேரளாவில் மறையூரில் அரசு சந்தன டெப்போ உள்ளது. குருவாயூர் கோயிலுக்கு அங்கிருந்து சந்தனம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்தே சபரிமலைக்கும் சந்தனம் வாங்கப்பட உள்ளது. தற்போதைய குத்தகை விபரம், சந்தனத்தின் தரம் உள்ளிட்டவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க சபரிமலை நிர்வாக அதிகாரி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதனால் விரைவில் சபரிமலை பக்தர்களுக்கு அரைக்கப்பட்ட துாய சந்தனம் கிடைக்கும்.