உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட சென்னையில் மணக்கும் தமிழ் இசை!

வட சென்னையில் மணக்கும் தமிழ் இசை!

சென்னை:வண்ணாரப்பேட்டை, கோதண்டராமர் கோவிலில், வட சென்னை இசை  விழா என்ற பெயரில், ஒரு மாதத்திற்கு, தமிழ் இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

சென்னை, வண்ணாரப்பேட்டை, பேரம்பாலு தெருவில் உள்ள, கோதண்டராமர்  கோவிலில், வட சென்னை இசை விழா என்ற பெயரில், மார்கழி தெய்வத் தமிழ்  இசை மன்றம் சார்பில், மார்கழி மாதம் முழுக்க, தமிழ் இசை கச்சேரிகள் நடக்க  உள்ளன.

இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான, மா.கி.ரமணன்  கூறியதாவது:சென்னை நகரத்தின் உயிர்நாடியாக இருந்தது, வட சென்னை. இங்கு,  பட்டினத்தார், வள்ளலார் என, ஆன்மிகப் பெரியோர் பலர் வாழ்ந்துள்ளனர். இங்கு,  இசையும், தமிழும் கோலோச்சி வளர்ந்தது. தெய்வீகப் பாரம்பரியமுள்ள வட  சென்னையில் இருந்து, படித்தவர்களும், பணக்காரர்களும் படிப்படியாக விலகி,  தென் சென்னைக்கு செல்லத் துவங்கினர்.

இருப்பினும், வியாபாரிகளும், தினக் கூலியாட்களும், வட சென்னையை விட்டு  பிரிய வில்லை. அவர்கள், எப்போதுமே, பரபரப்பாக இயங்குகின்றனர்.இதனால்,  பாரம்பரியமான கோவில்களிலும், மன்றங்களிலும் கூட, நிகழ்ச்சிகள்  நடைபெறுவது குறைந்து விட்டது. இந்நிலையில் தான், 32 ஆண்டுகளுக்கு முன்,  வட சென்னையின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினோம்.

தென் சென்னையில், மாலையில், இசை நிகழ்ச்சிகள் நடத்துவர்.ஆனால்,  பாரம்பரியப்படி, தினமும் காலை, 6:30 மணிக்கு நாங்கள் இசை நிகழ்ச்சிகளை  நடத்துகிறோம்.இந்த ஆண்டு, வரும், 17ல் துவங்கும் இசை விழா, அடுத்தாண்டு,  ஜன., 29 வரை நடக்க உள்ளது. இதில், புகழ்பெற்ற வாத்திய இசைக் கலைஞர்கள்  மற்றும் பாடகர்கள் பங்கேற்கின்றனர்.முதல் நாள் விழா, பழைய வண்ணை  பாலமுருகன், கிஷோர்குமாரின் நாதஸ்வர இசையுடன் துவங்குகிறது.

தென் சென்னையில், தெலுங்கு கீர்த்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும்  நிலையில், தேவாரம், திருவாசகம், திருவருட்பா உள்ளிட்ட பக்தி பாடல்களுக்கு  தான் நாங்கள் முக்கியத் துவம் அளிக்கிறோம். பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,  சங்கீதா சிவகுமார், டி.எம்.கிருஷ்ணா, கடம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்களின்  கச்சேரிகளை, இலவசமாக, எளிய மக்களிடம் சேர்க்க உள்ளோம்.இவ்வாறு, அவர்  கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !