கிறிஸ்துமஸ் சிந்தனை 6
வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமானவர்
உன்னதமான இலக்கைக் கொண்டு இவ்வுலகிலே பிறந்த மாபரன் இயேசு பிறப்பு, எல்லோரு க்குமே அமைதியைக் கொண்டு வரவில்லை என்பது உண்மை. இயேசு பிறந்த காலத்தில் யூதேயாவின் அரசனாக இருந்தவர் பெரிய எரோது. பாலன் இயசுவை காண விண்மீன் வழி காட்ட பயணத்தை தொடர்ந்த ஞானிகள் வழி தடுமாறிய நேரத்தில் யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று ஞானிகள் கேட்ட போது, எரோது அரசனுக்கு இந்த செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மத்தேயு : 2 : 23ல் வாசிக்கிறோம். நமக்கு எதிராக, நம்மோடு போட்டியிட ஒருவன் பிறந்த விட்டானோ என்ற பயத்தில் ஏரோது, தன் ஆட்சிக்கு யார் இடையூறாக இருந்தாலும், தன் பதவியை பிடிக்க யார் நினைத்தாலும் அவர்களை கொல்வதில் குறியாக இருந்தான். அதற்கு உதாரணங்கள் தான் கி.மு. 34ல் தன் சகோதரன் ஜோசப்பை கொலை செய்ததும், கி.மு. 35ல் தன் மைத்துனரை எரிக்கோகுளத்தில் மூழ்கடித்து கொலைசெய்ததும். அதன் தொடர்ச்சியாக இயேசு தப்பியதை அறிந்து 2 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளையும் கொல்வதற்கு ஆணை பிறப்பித்தது.
இயேசுவின் பிறப்பு ஏரோதுக்கு மட்டுமல்ல ஜெருசலேம் நகரம் முழுமைக்கும் கலக்கத்தை தருவதாக அமைந்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில், “இக்குழந்தை இஸ்ரயேல் மக்கள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாகவும், எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் ” (லூக்கா: 2:34) என அன்றே சிமியோன் முன்னுரைத்தார்
இயேசுவின் பிறப்பை வான தூதர்கள் இடையர்களுக்கு அறிவித்தபோது “உன்னதத்தில் கடவு ளுக்கு மாட்சி உரித்தாகுக, உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக ” (லூக்கா :2:13-14) என வாழ்த்தியது. இந்த கிறிஸ்து பிறப்பு நமக்கு தரும் உணர்வு என்ன? அச்சமா? அமைதியா?