கோவையில் திருவையாறு; துவக்கமே படுஜோரு
கோவையில் திருவையாறு இசை நிகழ்ச்சி, பீளமேடு சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லுாரி அரங்கில் துவங்கியது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியகராஜசுவாமிகள், ராமபிரான் மீது பல நுாறு கீர்த்தனைகளை பாடியுள்ளார். அவரது நினைவாக திருவையாறில், ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்துவர். இதற்காக பல நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் பல இசைக்கலைஞர்கள் சங்கமிப்பது வழக்கம்.அது போன்று, கோவையில் திருவையாறு நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழ்ச்சி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. துவக்க நாளன்று காலை 10:00 மணிக்கு, தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் ஸ்ரீ ராயப்பன் குழுவினர் மங்கள இசை வழங்கினர்.10:30 மணிக்கு, அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலை கழக இசைத்துறை தலைவர் ஜனகமாயாதேவி, பிந்துஜெயராம், பிரிசிதாபால், ஸ்ருத்தி, திவ்யா, மாதவி, ஸ்வேதா, சஜிதாசுகு ஆகியோர் அடங்கிய குழுவினர், பாடல்களை பாடினர். மிருதங்க வித்வான் ரகுநாத், வயலின் பிருந்தா,கடம் ராம்குமார் ஆகியோர் பக்கவாத்தியங்களை இசைத்தனர்.தியாகராஜசுவாமிகள் இயற்றிய உற்சவ சம்பிரதாய கிருதிகளான, மேலு கோவைய்ய ராமா பவுளி ராகத்திலும், ஷீர சாகர விகாரா ஆனந்த பைரவி ராகத்திலும், நா பாலி ஸ்ரீ ராமா சங்கராபரண ராகத்திலும், பதிக்தி ஹாரத்தீரே சுருட்டி ராகத்திலும் பாடி, இசைகலைஞர்கள் பார்வையாளர்களை தாளம் போட வைத்தனர்.