மார்கழி உற்சவங்கள் தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும்’
சேலம்: ”மார்கழி உற்சவங்கள், சொற்பொழிவுகள் தான், மாணவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களை சமுதாயத்தில் ஒழுக்கமுள்ளவர்களாக உருவாக்குகிறது,” என, கலெக்டர் ராமன் பேசினார்.
சேலம் மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், சிங்கமெத்தை பகுதியில், ’மார்கழி மகோத்சவம்’ கலைவிழா, கடந்த, 29ல் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று (டிசம்., 31ல்), பாளையங்கோட்டை அமிர்தவள்ளி துளசிராமின் சிறப்பு சொற்பொழிவு, பெங்களூரு மகாலட்சுமி பாலாஜியின் பக்தி இன்னிசை, நாட்டிய சகோதரிகள் பூர்ணாஸ்ரீ பாலாஜி, தன்யஸ்ரீ பாலாஜியின் பரதநாட்டியம் நடந்தது.
அதில், கலெக்டர் ராமன் பேசியதாவது: சிறு வயதில், இதுபோன்ற மார்கழி விழா, தொண்டு அமைப்புகளின் விளையாட்டு போட்டிகள் தான், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது. சேலத்தில், 2007 முதல் செயல்படும், மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்கம், கண் தானம், மருத்துவ சேவை, கல்வி உதவி, பண்பாட்டு வகுப்பு, சிலம்பம், கோலாட்டம், ஓவியம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை, கோடை கால பயிற்சி வகுப்பு மூலம் கற்றுத்தந்து, மார்கழி மகோத்சவம் விழாவில், அவர்களது திறமை களை அங்கீகரிக்க மேடை அமைத்து தருகிறது. இதுபோன்ற மார்கழி உற்சவங்கள், சொற் பொழிவுகள் தான், மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களை சமுதாயத்தில் ஒழுக்கமுள்ள வர்களாக உருவாக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.