உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் கோயிலில் இன்று கொடியேற்றம்

கடையம் கோயிலில் இன்று கொடியேற்றம்

ஆழ்வார்குறிச்சி: கடையம் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் இன்று (26ம் தேதி) கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா துவங்குகிறது. கடையத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு தசரத சக்கரவர்த்தி வந்து பாவ விமோசனத்திற்காக வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் கடையத்தில் பாரதியார் வாழ்ந்த காலங்களில் தினமும் இக்கோயிலின் முன்புள்ள மிகப்பெரிய பாறை மீது அமர்ந்து காணி நிலம் வேண்டும் பராசக்தி என்பன உட்பட பல பாடல்களை எழுதியுள்ளார். இக்கோயில் தேர் திருவிழா இன்று (26ம் தேதி) காலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர். நான்காம் திருநாளான வரும் 29ம் தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் காட்சியளிக்கின்றனர். மே 2ம் தேதி நடராஜர் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தலும், 3ம் தேதி அதிகாலை நடராஜர் வெள்ளை சாத்தி காட்சியளித்தலும், இரவு பச்சை சாத்தி காட்சியளித்தலும், கங்காளநாதர் எழுந்தருளலும் நடக்கிறது. மே 4ம் தேதி அதிகாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளலும், காலை 8 மணிக்கு தேரோட்டமும், இரவு 9 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடக்கிறது. 10ம் திருநாளன்று காலை 8 மணிக்கு பூம்பல்லக்கில் சுவாமி, அம்பாள் காட்சியளித்தலும், இரவு தீர்த்தவாரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முருகன் மேற்பார்வையில் கட்டளைதாரர்கள், பொதுமக்கள், விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !