உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு

பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக பணிகளை, கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிப்ரவரி, 5ல், கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், விமான கோபுரத்தில் பிரதிஷ்டை செய்யும் கலசங்களுக்கு, தங்க முலாம் பூசும் பணி நடக்கிறது.நந்தி மண்டபம் முன், புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்காக, 40 அடி உயரத்துக்கு பர்மா தேக்கு மரம் வாங்கப்பட்டுள்ளது. நேற்று காலை, கோவிலுக்கு வந்த கலெக்டர் கோவிந்தராவ், கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லும் வழி, கோபுரங்களுக்கு புனித நீர் கொண்டு செல்லும் பாதை, கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி, புதிய கொடிமரம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

தொடர்ந்து, கூட்ட நெரிசல் இல்லாமல் கும்பாபிஷேகத்தை நடத்துவது பற்றி, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே,எஸ்.பி., மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதற்கிடையில், ராஜபாளையம் குற்றாலநாதர் உழவாரப் பணி குழுவினரும், கும்பகோணம் திருநாவுக்கரசர் உழவாரப்பணி குழுவினர் என, 200 பேர், கோவிலில் கிரிவல பாதை, நந்தவனம்,நுழைவுவாயில் பகுதிகளில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !