உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு புதிய கொடிமரம்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு புதிய கொடிமரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, புதிய கொடி மரத்தை தயார் படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தஞ்சாவூர் பெரியகோவிலில் ராஜராஜசோழன் காலத்தில், நிறுவப்பட்ட கொடி மரம் அந்நியர்களின் படையெடுப்பின் போது சேதமடைந்தன. பின்னர் நாயக்க மன்னர்கள் காலத்தில் நந்தி மண்டபத்துக்கு முன்புறம் புதிய கொடி மரம் நிறுவப்பட்டதாக  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொடர்ந்து, மன்னர் இரண்டாம் சரபோஜியால், 1801ம் ஆண்டில், புதிய கருங்கல் பீடம் கட்டப்பட்டு, 1814ம் ஆண்டில், பழுதடைந்த கொடி மரத்துக்குப் பதிலாகப் புதிய கொடி மரம் நிறுவப்பட்டன.  இக்கொடி மரமும் பழுதடைந்து விட்டதால் 2003, பிப். 7ம் தேதி, புதிய கொடி மரம் அமைக்கப்பட்டு, அதற்குக் கும்பாபிஷேக விழாவும் நடத்தப்பட்டது. இந்நிலையில், பிப். 5ம் தேதி, நடைபெறுள்ள கும்பாபிஷேகத்திற்காக, கொடி மரத்தில் இருந்த பித்தளை கவசங்களைப் புனரமைப்பு செய்வதற்காக, கடந்த ஜன. 2ம் தேதி கழற்றப்பட்டு, பாலீஷ் போடப்பட்டு வருகிறது. மேலும், புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பழைய கொடி மரம், 17 ஆண்டுகளுக்கு பிறகு, ஜன. 12ம் தேதி அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய கொடி மரம் அமைப்பதற்காக சென்னையிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 40 அடி உயர பர்மா தேக்கு வரவழைக்கப்பட்டு, கொடி மரத்தை செதுக்கும் பணியில், மதுரையை சேர்ந்த ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் 20 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஸ்தபதி செல்வராஜ் கூறியதாவது;
இந்தப் புதிய கொடி மரத்தில் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் தலா நான்கரை அடி உயரத்திலும், ருத்ர பாகம் இருபத்தி எட்டரை அடியிலும் செய்யப்படவுள்ளது. ஏற்கெனவே இதன் மீதிருந்த செப்புக் கவசங்கள் இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்பட்டு, பாலீஷ் போடும் பணி முடிந்து ஒரு வாரத்தில் பீடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !