உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறிவுக்கண் திறக்கும் காயத்ரி மந்திரம்

அறிவுக்கண் திறக்கும் காயத்ரி மந்திரம்

’ஓம்
பூர் புவ ஸ்வஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியே யோந ப்ரசோதயாத்

மேற்கண்ட காயத்ரி மந்திரம் அறிவுக்கண் திறக்கும் சக்தி கொண்டது என்று வேத நூல்கள்  கூறுகின்றன.

இந்த மந்திரத்தை ஜபிக்கும்போது ’ஓம் முதற்கொண்டு ஒவ்வொரு அடி இறுதியிலும்  நிறுத்திச் சொல்லவேண்டும் என்பது மரபு. எனவே, தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று இந்த மந்திரத்தினை ஜபித்தல் வேண்டும் என்று ஆன்றோர் சொல்வர்.

’காயத்ரி வேதங்களின் தாய். சகல பாவங்களையும் போக்குபவள். காயத்ரியைப் போல  பவித்ரமான மந்திரம் இந்த பூலோகத்தில் இல்லை; விண்ணுலகிலும் இல்லை. காயத்ரிக்கு  மேலான ஜபம் இருந்ததுமில்லை; இனிமேல் இருக்கப் போவதுமில்லை ’ என்று யாக்ஞவல்கியர் என்ற மகரிஷி அருளியிருக்கிறார்.

’இவ்வுலகத்திலும் பரவுலகத்திலும் எல்லா விருப்பங்களையும் பூர்த்திசெய்யும் தவத்தை வளர்க்க, காயத்ரியை விட மேலான மந்திரம் இல்லை ’ என்கிறது தேவி பாகவதம்.

’மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருபவன், வாயுபோல சுதந்திரமாக  இயங்கிப் பிரம்மத்தை அடைவான்’ எனக் கூறுகிறது மனு ஸ்மிருதி.

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் ’மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்’  என்கிறார்.

இந்த சக்தி வாய்ந்த மந்திரமானது மகரிஷி விஸ்வாமித்திரர் அருளியது என்று ஞான நூல்கள் சொல்கின்றன. காயத்ரி மந்திரம் 24 அட்சரசக்திகள் கொண்டது. அவை ஒலி  வடிவமானவை ’வேதமாதா ’ என்றும், ’சந்தஸாம் மாதா ’ என்றும் அழைக்கப்படுகிறது.

பரம்பொருளை சக்தியாகவும், தாயாகவும் வழிபடுவது இந்துக்களிடையே உள்ள  தனிச்சிறப்பு. இந்த முறையில் காயத்ரியை தேவியாகவே பெரும்பாலானவர்கள்  வழிபடுகிறார்கள். காயத்ரி உலகத்திற்குக் காரணமான பராசக்தி. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்குக் காரணமாகவும், ஈஸ்வரனின் (பரம்பொருளின்) சக்தியாகவும் விளங்குகிறது என்று ஸ்மிருதி குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !