கை கொடுத்த தெய்வம்
ராமபிரான் ராவணனுடன் போரில் ஈடுபட்டு அவனுடைய பத்துதலைகளையும் வெட்டி வீழ்த்தினார். ஆனால், மீண்டும் மீண்டும் தலைகள் முளைத்தெழுந்தன. அசுரசக்தியான ராவணனின் கொட்டத்தை அடக்க வழியறியாது ராமன் திகைத்து நின்றார். சத்திய சொரூபமான ராமனிடம்அகத்தியர், ராமா! ராவணன் ஒரு சிவபக்தன்! அவனைப் போரில் வெல்வது சுலபம் அல்ல. தவத்தால் சிவ பெருமானிடம் பலவரங்களைப் பெற்றதால் செருக்குடன் அலைகிறான். உன் குலதெய்வமான சூரியனை வழிபாடு செய்வாயாக. அதற்குரிய ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை ஜெபித்துவிட்டு பாணத்தை அவன் மீது தொடு. நிச்சயம் போரில் வெற்றி உனக்குத்தான்! என்று அருள்புரிந்தார். ராவணன் தம்பியான விபீஷணனும் ராவணனின் மார்பில் அமுதகலசம் இருக்கிறது. அந்த அமுதத்தின் பயனால் தான் மீண்டும் மீண்டும் அறுபட்ட தலைகள் முளைக்கின்றன. அதனால், அம்பினை அவன் மார்பினை இலக்காகக் கொண்டு விடும்படி ஆலோசனை தெரிவித்தான். ராமனும் சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் ஜெபித்து ராவணன் மார்பை நோக்கி அம்பினைத் தொடுத்தார். நொடியில் ராவணன் உயிர் பிரிந்தது. வானரங்கள் ராமனுக்கே வெற்றி என்று ராமஜெயம் பாடித் துதித்தனர். இம்மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் எதிரி பயம் நீங்கும். வழக்கில் வெற்றி உண்டாகும்.