42 அடி உயர முருகன் சிலைக்கு பாலாபிஷேகம்
திருவொற்றியூர்: தை கிருத்திகை மற்றும் மண்டல பூஜை நிறைவையொட்டி, 42 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைக்கு, பாலாபிஷேகம் நடந்தது. திருவொற்றியூர், ஜோதி நகரில், ஒன்றரை மாதங்களுக்கு முன், 42 அடி உயர முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு நடந்தது. முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 48 நாட்கள் நிறைவுற்ற நிலையில், மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று காலை நடந்தது. கோவில் வளாகத்தில், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொலுவிருக்க செய்திருந்தனர். கலசம் நிர்மாணிக்கப்பட்டு, யாக வேள்விகள், வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டன.
இதில், 1,008 சங்குகள் வைக்கப்பட்டு, சங்காபிஷேகம் நடந்தது. நிறைவாக, பூர்ணாஹூதி முடிவுற்று, கலச புறப்பாடாகின. கோவிவில் வீற்றிருக்கும் மூலவருக்கு, வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 42 அடி உயர முருகன் சிலைக்கு, புனித நீர் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. பின், முருகனுக்கு, பிரமாண்ட பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் மீது மலர்கள் துாவப்பட்டன. நிறைவாக, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள், ‘அரோகரா’ என, முழங்கினர். இவ்விழாவில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.