கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)-வீட்டில் மகிழ்ச்சி பணியில் புத்துணர்ச்சி 85/100
வசீகரிக்கும் குணத்தால் பிறரை ஈர்க்கும் கடகராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் மிகுந்த ஆதாய பலன்களைத் தரும் வகையில் உள்ளார். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு மூன்றாம் இடமான புகழ், தைரியம், ஐந்தாம் இடமான புத்திர, பூர்வ புண்ணியம், ஏழாம் இடமான நட்பு, களத்திர ஸ்தானங்களை பார்க்கிறார். கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப்புறக்கணித்த சொந்தபந்தம் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் செல்வாக்கு கூடும். புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு. உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும். எதிர்கால தேவை கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள். திருமண வயதினருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும்.
தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் விறுவிறுப்புடன் செயல்பட்டு பொருள் உற்பத்தியைப் பெருக்கி லாபம் காண்பர். மற்ற தொழிலதிபர்களுக்கும் பன்மடங்கு ஆதாயம் உயரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வர். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை நவீனமயமாக்குவர். தொழிலாளர்கள் நிறுவன வளர்ச்சியில் அக்கறை கொள்வர்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயத்தை உயர்த்துவர். போட்டி குறைந்து விற்பனை இலக்கை எளிதில் எட்ட இயலும். புதிதாகக் கிளை தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வு, பாராட்டு கிடைக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். எதிர்பார்த்த சலுகைகள் படிப்படியாக கிடைக்கத் தொடங்கும். சக பணியாளர்களிடம் நட்புக்கரம் நீட்டுவர். பணியிடத்தில் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணியை செவ்வனே நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், பிற சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். குடும்ப பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு கணவர், உறவினர்களிடம் செல்வாக்கு காண்பர். குடும்ப செலவுக்கான பணவசதி தாராளமாக கிடைத்து வரும். அவரவர் தகுதிக்கேற்ப பொன், பொருள் சேர்க்கை கிடைக்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றமும், நல்ல லாபமும் காண்பர்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்விவளர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்களும் தரத்தேர்ச்சி பெறுவர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். ஆரம்ப,மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் படிப்பிற்காக அதிக நேரம் ஒதுக்குவர். படிப்புக்கான பணவசதி சீராகக் கிடைக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு தாமாக வந்து சேரும். ஆதரவாளர் மத்தியில் செல்வாக்கு கூடும். அதி காரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களாலான உதவிகளைச் செய்வர். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும் . வழக்குவிவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
விவசாயிகள்: விவசாயப்பணி சிறப்பாக நடைபெறும். அமோக விளைச்சலும், அதன்மூலம் அபரிமிதமான லாபமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் கிடைக்கும். நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சுமூகத்தீர்வால் நிலப்பிரச்னை நல்லவிதமாகத் தீரும்.
பரிகாரம்: ராமரை வழிபடுவதால் வாழ்வில் அனுகூலமான பலன்கள் பன்மடங்கு உயரும்.
செல்ல வேண்டிய தலம்: கும்பகோணம் ராமர் கோயில்.
பரிகாரப்பாடல்: நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்.
வக்ர கால பலன்: உங்கள் ராசிநாதன் சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சம அந்தஸ்து உள்ள கிரகமான குருபகவான் 10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி அடைகிறார். இந்த நிலை, உங்கள் வாழ்வில் புதிய சாதனைகளை உருவாக்க உதவும். நீண்டநாள் எதிர்பார்ப்பு கூட நிறைவேறும். திட்டமிட்டிருந்த பணிகளை உற்சாகத்துடன் செயல்படுத்துவீர்கள். பணவரவும் திருப்திகரமான வகையில் கிடைக்கும். சமூகத்தில் பேச்சுக்கு மதிப்பிருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி தாராள பணச் செலவில் நடந்தேறும். தொழிலில் அதிர்ஷ்டகரமான வாய்ப்பின் மூலம் வருமானம் கூடும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றி சந்தோஷம் காண்பீர்கள். தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள் புதிய பதவி, பொறுப்பு, பாராட்டுகளைப் பெற்று மகிழ்வர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் இருப்பர்.