சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளம் அசுத்தம்
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை சுத்தம் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், பழமையான அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகில், சுத்த தீர்த்த புஷ்கரணி குளம் உள்ளது. இதில், ஆண்டு தோறும் மாசி மாதம் தெப்ப உத்சவம் ஐந்து நாட்கள் நடைபெறும். உற்சவர் பிரகலாதவரதர், அலங்காரத்துடன் ஸ்ரீ தேவி , பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார். கடந்த சில மாதங்களாக இந்த குளத்தின் தண்ணீர் மாசடைந்து, பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து உள்ளன.
இதன் காரணமாக தண்ணீரின் நிறம் மாறி உள்ளது. மேலும், குளத்தை சுற்றியுள்ள குடியிருப்பு மக்கள் குளத்தை அசுத்தம் செய்து வருகின்றனர். இந்த குளத்தை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.