உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயண யாத்திரை ரயில் நெல்லையில் இருந்து இயக்கம்

ராமாயண யாத்திரை ரயில் நெல்லையில் இருந்து இயக்கம்

சென்னை: திருநெல்வேலியில் இருந்து, ராமாயண யாத்திரை சிறப்பு ரயிலை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி.,யால், சிறப்பு யாத்திரை ரயில்கள், மதுரையில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. தற்போது, முதல் முறையாக, ராமாயண யாத்திரை சுற்றுலா ரயில், திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படுகிறது.இந்த ரயில், இந்தியாவில் ராமாயணம் நிகழ்ந்த இடங்களுக்கு செல்கிறது. ஒரு காவிய யாத்திரை ரயிலாக இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து, மார்ச், 3ம் தேதி புறப்படும் ரயில், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும்.இந்த யாத்திரையில், கர்நாடகா மாநிலம், ஹோஸ்பேட், நாசிக் பஞ்சவடி, சீதா குகைகள் தரிசனம்; உத்தரப்பிரதேச மாநிலத்தில், சித்திரகூடம்; காசியில், துளசி மானசமந்திர், ரகுநாதபுரம் பிரமேஸ்வரநாதர் கோவில், அயோத்தி ராமஜென்மபூமி, அலகாபாத் திரிவேணி சங்கமம், அனுமன் கோவில், சிருங்கவெற்பூர் மற்றும், சீதாமார்திக்கு செல்லலாம்.நேபாளத்தில் சீதா பிறந்த இடமாக கருதப்படும், ஜனக்புரி கோவில் என, ராமாயணம் தொடர்பான கோவில்களை தரிசித்து வரலாம்.

மொத்தம், 14 நாட்கள் பயணத்துக்கு, ஒருவருக்கு, 15 ஆயிரத்து, 990 ரூபாய் கட்டணம். மேலும் தகவலுக்கு, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680, 82879 32121 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !