மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)-அற்புதம் நிகழ்த்துவார் ஐந்தாமிட குரு 80/100
சாஸ்திர சம்பிரதாயங்களை மதித்து செயல்படும் மகர ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி அனுகூல பலன் தருகிற ஐந்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் விலகி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஒன்பதாம் இடமான பிதா, பாக்யம், பதினொன்றாம் இடமான ஆதாயம், ஒன்றாம் இடமான ராசி ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும். சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. ஏற்கனவே வீடு, வாகனம் இருப்பவர்களுக்கும் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பிலும் நல்ல குணத்திலும் முன்னேற்றம் பெறுவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். ராசியை குரு பார்ப்பதால் உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். சொத்துக்களில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும். தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள். குடும்பத்திற்கான முக்கிய தேவைகள் நிறைவேறும். சகல சவுபாக்ய வசதிகளும் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் மன ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வளர்ச்சியும் மனதிற்கு நெகிழ்ச்சியும் கிடைக்கும். கல்வி, நிதி நிறுவனம், பால்பண்ணை, ரியல் எஸ்டேட், அரிசி ஆலை, டிராவல்ஸ், , லாட்ஜ், மருத்துவமனை நடத்துபவர்கள், ஆட்டோமொபைல், கிரானைட், அச்சகம், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், மினரல் வாட்டர், மின்சார, மின்னணு பொருட்கள் தயாரிப்போர் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் அதிகம் பெறுவர். மற்ற தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். உபரி வருமானம் உண்டு. உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், சமையலறை சாதனங்கள், பால்பொருட்கள், வாசனை திரவியம், மீன்கள், தோல் பொருட்கள், ஸ்டேஷன, பூஜை பொருள் வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் மூலம் விற்பனை உயரும். லாப உயர்வு சேமிப்பை உருவாக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து பணி இலக்குகளை எளிதாக நிறைவேற்றுவர். சம்பள உயர்வு, பிற சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தின் முக்கியத் தேவைகளுக்கு தாராளமாக செலவு செய்வீர்கள். வருமானம், பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள். கூடுதல் சொத்து முக்கிய வீட்டு சாதனப் பொருள் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர். பணி இலக்கு சிறப்பாக பூர்த்தியாகும். எதிர்பார்த்த சலுகைகள் சுணக்கமின்றி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து ஒற்றுமை குணத்துடன் செயல்படுவர். குடும்பத்தின் முக்கிய தேவை தாராள செலவில் நிறைவேறும். மங்கல நிகழ்வுகளும் உண்டு. ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கர்ப்பிணிகள் தகுந்த சிகிச்சை, ஓய்வு பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு பெறுவர்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், தொழில்நுட்பம், பியூட்டீஷியன், ஆசிரியர் பயிற்சி, வணிகம், கலைத்துறை, கேட்டரிங், ஆடிட்டிங், இதழியல் துறை மாணவர்கள் படிப்பில் கவனம், ஞாபகத்திறன் வளர்ந்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் இவர்களை விட சிறப்பாகப் படித்து பரிசு, பாராட்டு பெறுவர். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் குருவின் அனுகிரகத்தைப் பயன்படுத்தினால் மாநில ராங்க் பெறலாம். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும். படிப்புக்கான பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: சிறிய அளவில் செய்கிற பணியும் ஆதரவாளர்களிடம் நம்பிக்கையும் பிரமிப்பையும் உருவாக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைத்து புதிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பொது விவகாரங்களில் உங்களின் ஆலோசனை பெரிய அளவில் வரவேற்பை பெறும். எதிரியின் செயல்களால் பாதிப்பு எதுவும் வராது. புத்திரர்கள் சொல்லும் யோசனை உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவங்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் தாராள உற்பத்தி, விற்பனை அமைந்து உபரி பணவரவு பெறுவர்.
விவசாயிகள்: விவசாய பணிகள் சிறந்து நல்ல மகசூல் தரும். பயிர்களுக்கு எதிர்பார்ப்பைவிட கூடுதல் விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. நில விவகாரங்களில் சாதகமான தீர்வு ஏற்படும்.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் வாழ்வில் சகலவளமும் ஏற்படும்.
செல்ல வேண்டிய தலம்: சென்னை அஷ்டலட்சுமி கோயில்
பரிகாரப்பாடல்: உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே!
உலகமெல்லாம் காத்துநிற்கும் தேவி மகாலட்சுமியே!
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலட்சுமியே!
உன் பாதம் சரணடைந்தோம் நலம் தருவாய் அம்மா!
வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவானுக்கு சம அந்தஸ்து உள்ள கிரகமான குரு, சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் வக்ரகதி பெறுகிறார். இதனால் நடை, உடை பாவனையில் வசீகர மாற்றம் ஏற்படும். வெகுநாள் திட்டமிட்ட செயல்களை உரிய வகையில் பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரித்து குடும்பத்தின் முக்கிய தேவை பெருமளவில் நிறைவேறும். சமூகத்தின் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். புத்திரர்கள் படிப்பு, செயல் திறனில் முன்னேற தேவையான உதவி வழங்குவீர்கள். எதிரியின் கெடுசெயலை மன்னித்து சமரச போக்கை பின்பற்றுவீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. பணியில் உள்ளவர்கள் கூடுதல் அந்தஸ்து பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.