சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா 4 கால பூஜை
திருப்பூர்: பிரதோஷத்துடன் கூடிய மகா சிவராத்திரி விழா இன்று நடப்பதால், சிவாலயங்களில், இரவு நேர அபிஷேக பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாசிமாத சிவராத்திரி, மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், ஆண்டு முழுவதும் சிவராத்திரி விரதம் இருந்ததாக ஐதீகம். அதன்படி, சிவன் கோவில்களில் நடக்கும் இரவு நேர அபிஷேக பூஜைகளை காண, பக்தர்கள் நுாற்றுக்கணக்கானோர் பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாட்டின் தொடர்ச்சியாக, சிவராத்திரி பூஜைகள் துவங்கும். நான்குகால பூஜைகளில், மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடக்க உள்ளது.நான்கு வேதங்களை போற்றும் வகையில், நான்குகால பூஜைகள் இரவில் நடக்க உள்ளது. இரவு, 7:00 மணிக்கு முதல் அபிஷேக பூஜையும், இரவு, 10:00 மணிக்கு, இரண்டாவது அபிஷேக பூஜை; 12:00 மணிக்கு மூன்றாவது அபிஷேக பூஜையும் நடக்கிறது.நான்காம் கால அபிஷேக பூஜைகள், அதிகாலை, 3:00 மணிக்கு நடக்கும். தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், இன்று காலை முதல் விரதம் இருந்து, இரவுநேர அபிஷேக பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்யலாம் என, சிவாச்சார்யார்கள் தெரிவித்துள்ளனர்.