உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் மயானக்கொள்ளை உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் மயானக்கொள்ளை உற்சவம்

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை உற்சவத்தில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பிரசித்திபெற்ற மாசி தேர் திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 10 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் விஸ்வரூபக் கோலத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டார். முன்னதாக கோவில் பூசாரிகள் பிரம்ம கபாலத்துடன ஆடியபடி வந்தனர். அம்மன் வந்தபோது வழிநெடுகிலும் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்கள், தானியங்கள், சேவல் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வாரி இறைத்தனர். 10.40 மணிக்கு அம்மன் மயானத்தை வந்தடைந்ததும், மயானத்தில் பக்தர்கள் காணிக்கையாக பெற்று, குவியலாக வைத்திருந்த காய்கனிகள், தானியங்கள், உணவு பொருட்களுக்கு படையலிட்டு பூசாரிகளும் பொது மக்களும் கொள்ளை விட்டனர். அப்போது பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் செல்வம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், சரவணன், வடிவேல், சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., நீதிராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !